சிங்கப்பூர் தொடர்ந்து ஒட்டுமொத்த மருத்துவமனை ஆற்றலைப் பெருக்கி கடும்பாதிப்புக்கு ஆளாகும் கொவிட்-19 நோயாளிகளில் அதிகம் பேருக்குச் சிகிச்சை அளிக்கும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
தனியார் துறையுடன் சேர்ந்து அது படுக்கைகளை அதிகரிக்கும் என்றும் வெளிநாட்டு மருத்துவர்கள், தாதியர்களை வேலையில் நியமிக்க அது ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து சீராக இருந்து வருகிறது என்றாலும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதை அவர் சுட்டினார்.
தனியார் துறையில் கொவிட்-19 சிகிச்சை ஆற்றலை சுகாதார அமைச்சு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொவிட்-19 சிகிச்சை நிலையங்களையும் அது பெருக்கி வருகிறது. இம்மாத முடிவில் 4,000 வரைப்பட்ட படுக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அவற்றில் பாதி அளவுக்கும் குறைவாகத் தான் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று டாக்டர் புதுச்சேரி விளக்கினார்.
கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், கொவிட்-19 நோயாளிகளுக்காக இப்போது 250 தீவிர சிகிச்சை படுக்கைகள் இருப்பதாகவும் அவற்றில் 134 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் ஏறத்தாழ 140 முதல் 150 வரைப்பட்ட கொரோனா அல்லாத நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் அவர் சுட்டினார்.
மனித ஆற்றலும் ஊழியர்களின் மனநிறைவும்தான் இப்போது ஒரு சவாலாக இருக்கிறது என்றார் அவர். சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் இடைவிடாமல் பணியாற்றி வருகிறார்கள். அதிக வேலை பளுவை அவர்கள் தொடர்ந்து சுமந்து வருகிறார்கள்.
கொவிட்-19 நோயாளிகளையும் மற்ற நோயாளிகளையும் அவர்கள் பராமரித்து வருகிறார்கள் என்றார் அவர்.
கொவிட்-19 பரிசோதனை நிலையங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 300 பேரை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி அதன்மூலம் மருத்துவமனை மனித ஆற்றலுக்கான சுமையை அமைச்சு குறைத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு மருத்துவர்கள், தாதியர்களுக்கான வேலை அனு மதியைப் புதுப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்துவதன் தொடர்பில் மனிதவள அமைச்சுடன் சுகாதார அமைச்சு சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், வெளிநாடுகளில் இருந்து சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை வேலையில் சேர்க்கும் முயற்சிகளுக்கு அது ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.
ஊழியர்களின் சுமையைக் குறைக்க இதர வழிகள் குறித்தும் ஆராயப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களை ஆதரிப்பதில் மக்கள் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.