தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, 60க்கும் மேற்பட்ட வயதுள்ள முதியவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட்டில் இருந்து பாதிக்கு மேல் குறைந்துவிட்டது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் முதியவர்களின் எண்ணிக்கை 64,000க்கும் குறைவு என்றார். இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 175,000 ஆக இருந்தது. சிங்கப்பூர் தடுப்பூசிக் குழுவினரின் கடும் உழைப்பு காரணமாக இந்த எண்ணிக்கை பெரிதும் குறைந்து இருக்கிறது என்றார் அவர்.
"இதை நாம் செய்திருக்கவில்லை என்றால் நமது மருத்துவமனை, தீவிரப் பராமரிப்புப் பிரிவுகள் ஏற்கெனவே நிரம்பி வழிந்திருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு ஜூலை முதல் 27,000 முதியவர்கள் உள்ளிட்ட 70,000 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசியை நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் போட்டு இருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார். இந்தக் குழுக்கள், நேற்று முதல் தேசிய தடுப்பூசி செயல்திட்டத்தின்கீழ் சினோவேக்- கொரேனாவேக் தடுப்பூசியையும் போடுவதாகக் குறிப்பிட்டார்.
அக்டோபர் 30 முதல் இந்தத் தடுப்பூசியை முதல் முறையாகப் போட்டுக்கொள்ள 2,900க்கும் மேற்பட்ட மக்கள் முன்வந்தனர். அவர்களில் 500 பேர் முதியவர்கள்.
பூஸ்டர் தடுப்பூசி பற்றி குறிப்பிட்ட அவர், நவம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி, 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள முதியவர்களில் 85 விழுக்காட்டினர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அல்லது அதற்கு முன் பதிவு செய்து இருக்கிறார்கள் என்றார்.
இந்த ஆண்டு முடிவில், மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதிப்பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் பேட்டுக்கொண்டு இருப்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.