கொள்ளைநோய் நெருக்கடியில் மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் கருத்துகள் மற்றும் பதிவுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்ச வலியுறுத்தியுள்ளது.
சமூக ஆர்வலரான கில்பர்ட் கோ வெளியிட்ட தகவல் குறித்து அமைச்சு அவ்வாறு எச்சரித்தது.
இம்மாதம் 1ஆம் தேதி கில்பர்ட் கோ தமது ஃபேஸ்புக் பதிவில் இரு சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அதில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவிலிருந்து இரண்டு முறை வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் கொவிட்-19 தொற்றால் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பூசி போடாத இருபது வயது ஆஸ்துமா பெண் ஒருவர் மூச்சுத் திணறல் இருந்தும் விபத்து, அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இரண்டு சம்பவங்களையும் மற்றொருவர் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக கில்பர்ட் கோ கூறியிருந்தார். ஆனால் இதனை மறுத்துள்ள சுகாதார அமைச்சு அப்படி இரு சம்பவங்களும் நடந்ததாக எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்தது. இவை இரண்டும் 'கடுமையானக் குற்றச்சாட்டுகள்' என்று கூறிய அமைச்சு, அதற்கான விவ ரங்களை வெளியிடுமாறு கில்பர்ட் கோவை கேட்டுக்கொண்டது. "எங்கள் பதிவேடுகளை ஆராய்ந்துபார்த்தோம். அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் விவரித்ததுபோல பொருந்தக்கூடிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. அவர் தெரிவித்ததை கடுமையான குற்றச் சாட்டுகளாகக் கருதுகிறோம். இதனால் அவரே முன்வந்து நோயாளிகளின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்," என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.
கிருமித் தொற்றால் இறந்த மாது, நண்பரின் உறவினர் என்று தம்மிடம் தகவலைப் பகிர்ந்துகொண்டவர் கூறியதாக கில்பர்ட் கோ தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த மாது, தடுப்பூசி போடாத ஆஸ்துமா பாதிக்கப்பட்ட இருபது வயது பெண்ணின் தாயார் என்றும் சுவாசப் பிரச்சினை இருந்தபோதும் வீட்டுக்கு அனுப்பப்பட்டதால் எட்டு கிலோ எடை குறைந்துவிட்டதாகவும் பின்னர் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு நுரையீரல் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த நபர் கூறியதாக கில்பெர்ட் கோ தெரிவித்தார்.
இந்த நிலையில் தனிநபர் ஒருவரின் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அதில் உண்மை இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும், அப்போதுதான் தேவையற்ற வதந்திகளைத் தடுக்க முடியும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.