அரசாங்கம் செயற்கை நுண்ணறிவுத் துறை ஆய்வைத் துரிதப்படுத்த கூடுதலாக $180 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
ஏற்கெனவே அரசாங்கம் அத்துறை ஆய்வுக்கு $500 மில்லியனை ஒதுக்கியிருந்தது.
மேலும், அது இரண்டு புதிய பொதுத்துறை செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சமூகப் பொருளியல் நன்மைக்குப் பயன்படுத்தும் அரசாங்க உத்தியின் ஒரு பகுதியாக அவை தொடங்கப்பட்டன.
முதல் திட்டம், நிதித்துறைக்கான தேசிய செயற்கை நுண்ணறிவுத் திட்டம். இதன் ஒரு பகுதி யாக, நோவா! எனும் நிதித்துறைக்கான செயற்கை நுண்ணறிவுத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிதித் துறையில் ஏற்படக்கூடிய அபாயங்கள் பற்றி அந்தத் தளம் கூடுதல் விளக்கமளிக்கும்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் வங்கிகளும் நிதித் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களும் இணைந்து அந்தத் தளத்தை உருவாக்கியுள்ளன. நிதி அமைப்புகள் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தை இன்னும் சிறப்பாக மதிப்பிடவும் புதிய சுற்றுச்சூழல் அபாயங்களை அடையாளம் காணவும் அது உதவும்.
நேற்று இரண்டாவதாக, அரசாங்கத் துறைக்கான தேசிய செயற்கை நுண்ணறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
அரசாங்கச் சேவைகளை இன்னும் மேம்பட்ட வகையில் வழங்க அது பயன்படுத்தப்படும்.
"பொதுமக்களுடன் நேரடித் தொடர்புகொள்ளும் அரசாங்க அமைப்புகள் ஒவ்வோர் ஆண்டும் பெறும் கருத்துகளைப் பகுத்தாய செயற்கை நுண்ணறிவை அதிகாரி கள் பயன்படுத்துவர்.
"அதன்வழி, பொதுமக்களுக்கு சிரமத்தைத் தரும் அம்சங்களை ஆராய்ந்து அவர்களுக்கு இன்னும் சிறப்பாகச் சேவையாற்ற முடியும்," என்றார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப வாரம் 2021உடன் சேர்ந்து நடத்தப்படும் சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்ப விழாவில் திரு ஹெங் பேசினார்.
சிங்கப்பூருக்கு ஐந்து தேசிய நுண்ணறிவுத் திட்டங்கள் இருப்பதைச் சுட்டிய துணைப் பிரதமர், அவற்றில் ஒன்று செலினா+ எனும் திட்டம் என்றார். மருத்துவத் துறையச் சேர்ந்த அத்திட்டத்தில் விழித்திரையைப் படமெடுத்து பெரிய கண் பிரச்சினைகளை மருத்துவர்கள் கண்டறிகின்றனர்.
நீடித்த புத்தாக்கத்துக்கு உகந்த துடிப்பான கட்டமைப்பை உருவாக்குவதும் செயற்கைத் துறையில் ஆய்வு மேம்பாட்டுக்கு வலுவான கடப்பாடு கொண்டிருப்பதும் சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு உத்திகளின் சில அம்சங்கள் என்று திரு ஹெங் தெரிவித்தார்.
வளங்களைச் செயல்திறனுடன் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் சிங்கப்பூர் முதலீடு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.