புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒளியூட்டு நிகழ்ச்சியுடன் தீபாவளிக் கொண்ட்டாட்டம் தொடங்கியது.
கண்காட்சியுடன் கூடிய அந்தக் கொண்டாட்டத்துக்கு புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற் பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியை புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் நடை பெறும் இந்த விழாவில் இவ்வாண்டு கண்காட்சி சிறப்பம்சமாக இருந்தது.
சுற்றுச்சூழலைப் பேணுதலும், இந்தியப் பண்பாடு பற்றி பல்வேறு மக்களும் தெரிந்துகொள்ளச் செய்தலும் முக்கிய இடம்பிடித்தன.
மறுபயனீட்டுப் பொருட்களைக் கொண்டு ரங்கோலிக் கோலத்தை வடிவமைத்தனர் ஏற்பாட்டாளர்கள்.
அத்துடன், இந்திய பண்பாட்டின் முக்கிய கூறுகளை எடுத்துரைக்க கண்காட்சியில் 10 கூடங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 7ஆம் தேதிவரை அதைப் பொதுமக்கள் பார்வையிட்டனர்.