லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடமைச் சங்கமும் லிஷா இலக்கிய மன்றமும் தமிழகத்தின் புதுயுகம் தொலைக்காட்சியுடன் இணைந்து தீபாவளிக்காக தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு மெய்நிகர் வழியாகவும் நேரடியாகவும் பட்டிமன்றம் ஒன்றை வழங்கினர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சிங்கப்பூர் பேச்சாளர்கள் தொழில்நுட்பம் வழி புதுயுகத்தின் பட்டிமன்ற மேடையில் இணைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மற்ற மூன்று பேச்சாளர்களும் நடுவரும் புதுயுகம் தொலைக்காட்சி அரங்கில் இருந்து பேசினர். மெய்நிகர் வழியாகவும் நேரடியாகவும் நடந்த பட்டிமன்றம், பார்ர்வையாளர் களுக்கு நேரடியாக நடந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது.
பேராசிரியர் சிவகாசி மு. இராமச்சந்திரனின் தலைமையில் "இன்றைய சூழ்நிலையில் பண்டிகை களால் நாம் பெறுவது பரவசமா? பதற்றமா?" என்ற தலைப்பில் பட்டி மன்ற விவாதம் நடந்தது,
சிங்கப்பூரிலிருந்து பேசிய அர்ஜின் நாராயணன், கே.வி இராஜா, கண்ணன் சேஷாத்ரி ஆகியோர் பண்டிகைகளால் நாம் பெறுவது பரவசமே என்று தலைப்பை ஒட்டிப் பேசினர்.
தமிழகத்தைச் சேர்ந்த இரவிக்குமார், சிங்கப்பூரைச் சேர்ந்த கங்கா பாஸ்கரன், பாரதி ஆகியோர் தலைப்பை வெட்டிப் பேசினர்.
இறுதியில் நடுவர் பண்டிகை களால் நாம் பெறுவது பரவசமே என்று தீர்ப்பளித்தார்.
லிஷாவிற்காக இந்தப் புதுமையான பட்டிமன்றத்தை லிஷா இலக்கிய மன்றம் தயாரித்து வழங்கியது.
தீபாவளிப் பண்டிகைக்காக வேறு பல நிகழ்ச்சிகளையும் இணையம் வழி லிஷாவும் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து வழங்கின.
சங்க இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்ட கருவிலிருந்து ஒரு நாட்டிய நாடகம், பல்லின இசைச் சங்கமம், இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை இடம்பெற்றன.