தாம்சன் வியூ கொண்டோமினியம் குறைந்தது $950 மில்லியனுக்கு விற்பனையாக இருக்கிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் பல இடையூறுகள் ஏற்பட்டபோதிலும் ஆறே மாதங்களில் கூட்டு விற்பனைக்கு 80 விழுக்காடு குடியிருப்பாளர்கள் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டு விற்பனைக்கு ஏலக்குத்தகை நடத்தப்படும்.
இவ்வாண்டில் இதுவே ஆகப் பெரிய குடியிருப்புக் கூட்டு விற்
பனையாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்சன் வியூ கொண்டோமினியத்தின் நில மதிப்பும் கூடுதல் விலையை நிர்ணயிக்க காரணமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
புதிதாக 99 ஆண்டு குத்தகைக்காலத்துக்கு மாற $324 மில்லியன் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏலக்குத்தகைக்கான விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது 255 வீடுகளைக் கொண்ட தாம்சன் வியூ கொண்டோமினியத்தின் ஐந்தாவது கூட்டு விற்பனை முயற்சி.
இதற்கு முன்பு, ஆகக் கடைசியாக அது 2018ஆம் ஆண்டில் அதற்கு முயற்சி செய்தது. ஆனால் கூட்டு விற்பனைக்கான குறைந்தபட்சத் தொகையாக $938 மில்லியனை ஏற்க குடியிருப்பாளர்கள் மறுத்துவிட்டனர்.
34 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த கொண்டோமினியம் அப்பர் தாம்சன் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ளது.
ஏறத்தாழ 50,197 சதுர மீட்டர் பரப்பளவில் அது கட்டப்பட்டுள்ளது. தாம்சன் வியூ கொண்டோமினியத்தில் 200 அடுக்குமாடி வீடுகளும் 54 தரைவீடுகளும் ஒரு கடையும் உள்ளன.
ஒவ்வோர் அடுக்குமாடி வீட்டின் உரிமையாளருக்கும் $2.6 மில்லியனிலிருந்து $3.7 மில்லியன் வரை கிடைக்கக்கூடும். அவர்களது வீட்டின் பரப்பளவைப் பொறுத்து அவர்களது வீட்டின் விலை முடிவு செய்யப்படும்.
தரைவீடுகளின் உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் $5.7 மில்லியன் கிடைக்கக்கூடும் என்று தாம்சன் வியூவைச் சந்தைப்படுத்தும் நிலச்சொத்து முகவையான 'ஆரஞ்ச்டீ அட்வைசரி' நிறுவனம் கூறியது.
சிங்கப்பூரில் கூட்டு விற்பனைகள் சூடுபிடித்து வருகின்றன. வீட்டு விலைகள் அதிகரிப்பு, குறைந்த வட்டி விகிதம், புதிய வீடுகளுக்கான விற்பனை அதி
கரிப்பு, நிலப் பற்றாக்குறை ஆகியவை இதற்கு முக்கிய காரணம்.
கடந்த மாதம் யுஒஎல் குழுமமும் சிங்கப்பூர் நிலக் குழுமமும் இணைந்து புக்கிட் தீமாவில் உள்ள வாட்டன் எஸ்டேட் கொண்டோமினியத்தை ஏலக்குத்தகை மூலம் $550.9 மில்லியனுக்கு வாங்கின.