தற்போதைய காலகட்டத்தில் கூடுதல் நீடித்த நிலைத்தன்மை உள்ள உள்கட்டமைப்பை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்படி பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
இன்று கூடுதல் தரவுகள், நிதி வளம், சரியான தொழில்நுட்பத்தை இன்னும் மேம்பட்ட வகையில் பயன்படுத்தினால், அத்தகைய கட்டடங்களைத் திட்டமிட்டு, வடி
வமைத்து, கட்டிமுடித்துப் பராமரிக்க முடியும் என்றார் அவர். நீடித்த நிலைத்தன்மைத் திட்டங்களுக்குத் தேவையான நிதி முதலீட்டைப் பெற உலகநாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் கொவிட்-19 சூழலால் அவற்றுக்கு நிதிச்சுமை அதிகமாகி உள்ளதாக திருவாட்டி இந்திராணி கூறினார்.
"மக்கள் தொகை உயர்வு, பொருளியல் வளர்ச்சிக்கு ஏற்ப நீடித்த நிலைத்தன்மை கொண்ட உள்கட்டமைப்பும் மேம்படுவதை உறுதி செய்யவேண்டும். அதற்கு, தேசிய நலன், வட்டாரத் தேவைகள், உலகளாவியப் போக்குகள் ஆகியவற்றுக்கு ஏற்ற, வளர்ச்சி அடையக் கூடிய துறைகளுக்கு உதவும் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து அவற்றில் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்," என்று திருவாட்டி இந்திராணி தெரிவித்தார்.
நீடித்த நிலைத்தன்மை கொண்ட உள்கட்டமைப்புக்கான ஆசிய ஆலோசனைக்குழுவின் முதல் கூட்டத்தில் அமைச்சர் பேசினார்.
தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான திருவாட்டி இந்திராணி, அந்த ஆலோசனைக்குழுவுக்குத் தலைமை தாங்கு கிறார்.
உலகளாவியப் போக்குகள் பற்றி யும் ஆசியாவில் நீடித்த நிலைத்தன்மையுள்ள உள்கட்டமைப்பை உருவாக்கும் சிறந்த வழிமுறைகள் பற்றியும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள அரசாங்கத் துறையினருக்கும் தனியார் துறையினருக்கும் அக்குழு தளமாகச் செயல்படுகிறது.
அக்குழுவின் கூட்டம் நேற்றும் இன்றும் நேரடியாகவும் மெய்நிகர் நிகழ்வாகவும் மரினா பே சேண்ட்சில் உள்ள சேண்ட்ஸ் மாநாட்டுக் கண்காட்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.
அதில் ஆசியான் செயற்குழு, ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு, ஜி20 பொருளியல்களின் உலக உள்கட்டமைப்பு நிலையம் ஆகிய அமைப்புகள் அதில் பல்வேறு அம்சங்களில் பொதுக் கலந்துரையாடல்களை நடத்தும்.