சிறுவர்களிடையே இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்
நிலையில், சைபர் சேஃப்: எ டாக்ஸ் கயிட் டு செக்யூரிட்டி என்ற தலைப்பு கொண்ட அந்நூலின் ஏறத்தாழ 2,000 பிரதிகள் 186 தொடக்கப்பள்ளிகளுக்கும் 190 சிறப்புக் கல்விப் பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இணையப் பாதுகாப்பு தொடர்பான மிரட்டல்களிலிருந்து மாணவர்
களைப் பாதுகாக்க இந்த நூல் இலக்கு கொண்டுள்ளது.
நேற்று சிங்கப்பூர் இணையத் தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது இணையப் பாதுகாப்பு தொடர்பான அந்நூலை 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் குறித்து இணையப் பாதுகாப்பு நிறுவனமான ஃபோர்ட்டினெட் அறிவித்தது. இவ்வாரம் நடைபெறும் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள், திட்டங்கள் ஆகியவற்றின் ஒரு
பகுதியாக இத்திட்டம் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளது.
கேலிச்சித்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்நூல், இணையத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தருகிறது.
இணையத்தை எதற்காகப் பயன்படுத்தலாம், அவற்றில் என்னென்ன செய்யலாம் என்று நூல் சொல்லிக்கொடுக்கிறது. அதே சமயத்தில் அதைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் நூல் கற்றுத் தருகிறது. உதாரணத்துக்கு இணையம் மூலம் முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்புவைத்துக்கொள்ளக்கூடாது என்பது வலியுறுத்தப்படுகிறது.
இந்நூலை இரண்டு தாய்மார்கள் புனைந்துள்ளனர். அவர்கள் ஃபோர்டினெட் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு துணைத் தலைவரான ரெனீ தருணும் அமெரிக்காவின் தேசிய கழகத்தின் அங்கீகாரம் பெற்ற ஆசிரியரான சூசன் பர்க்கும் ஆவர்.
சிறு வயதிலேயே இணையப் பாதுகாப்பு தொடர்பாக முறையான வழிகாட்டலைப் பெறுவது மிகவும் முக்கியம் என்று ஃபோர்ட்டினெட் நிறுவனமும் தகவல் பாதுகாப்பு நிபுணர்கள் சங்கமும் தெரிவித்தன.
"தற்போது பல மணி நேரத்துக்கு இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இணையம் வழி கற்றல் இப்போது வழக்கமானதாகி விட்டது. எனவே, இணையப் பாதுகாப்பு குறித்து சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்," என்று ஃபோர்டினெட் நிறுவனத்தின் சிங்கப்பூர், புருணை பிரிவுகளுக்கான தலைவர் திருவாட்டி ஜெஸ் இங் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதற்கு இணையத்துடன் இணைக்கப்படும் பல சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றின் மூலம் இணைய வழி தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக திருவாட்டி இங் கூறினார்.
எனவே, இணையத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது என்பதை தெளிவாகக் கற்றுக்கொடுக்கும் இந்த நூல் மிகவும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.