முன்னாள் காதலியைக் கர்ப்பமாக்கும் நோக்கில் அவரைச் சீரழித்த 26 வயது ஆடவருக்கு பத்து ஆண்டுகள், ஆறு மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
பத்து ஆண்டு உறவுக்குப் பின் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், அவரைத் தம்மோடு வீட்டுக்கு வருமாறு அந்த ஆடவர் வற்புறுத்தி அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கினால் வேறு வழியின்றி அவர் தம்மைத் திருமணம் செய்து கொள்வார் என்று அந்த ஆடவர் எண்ணியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வேண்டுமென்றே அப்பெண்ணுக்கு மனரீதியான பாதிப்பை ஏற்படுத்த அந்த ஆடவர் துணிந்ததை உயர் நீதிமன்ற நீதிபதி ஃபிலிப் ஜெயரத்னம் சுட்டினார். இதன் காரணமாகவும் அந்த ஆடவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.