கள்ள சிகரெட்டுகளைக் கடத்தியதன் சந்தேகத்தின் பேரில் இல்லப் பணிப்பெண்கள் இருவர் இந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
சிகரெட்டுகளை வாங்கி அவற்றை மிளகாய்த் தூள், நூடல்ஸ், மருந்துப் பொட்டலங்களில் மறைத்துவைத்து சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்குமாறு தங்களது சொந்த நாட்டில் உள்ள தொடர்புகளிடம் அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள அந்த பணிப்பெண்களுடைய நண்பர்களின் முகவரிகளுக்கு அந்தப் பொட்டலங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. பின்னர், அவர்களிடமிருந்து பொட்டலங்களை அந்தப் பணிப்பெண்கள் பெற்றுக்கொண்டனர்.
சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று (நவம்பர் 9) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்தது.
கள்ள சிகரெட்டுகளை உணவுப் பொருளில் மறைத்துவைத்து அனுப்பப்பட்டது குறித்து சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தகவல் அளித்தது.
பின்னர், இம்மாதம் 1, 2 ஆகிய தேதிகளில் வாம்போ டிரைவிலும் சுவா சூ காங் சென்ட்ரலிலும் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் இரு பணிப்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் 26 வயதாகிறது.
மொத்தம் 36 பெட்டிகள், 56 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது.