பணிப்பெண் ஒருவர், தன் முதலாளியின் மாமியாரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது அந்தப் பணிப்பெண், அவருடைய முதலாளியின் மாமியாரால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். அதனால்தான் அவரைக் கொலைசெய்ய வேண்டியிருந்தது என்று கூறியுள்ளார்.
ஸின் மார் வீ என்ற 26 வயது மியன்மார் நட்டவரான அந்தப் பணிப்பெண் கடந்த 2018ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி, நண்பகல் நேரத்தில் 70 வயது மூதாட்டியை சமையலறைக் கத்தியால் 26 முறை குத்திக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பணிப்பெண், சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் சுற்றித்திரிந்து விட்டு, தனது பணிப்பெண் முகவர் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கிருந்து போலிஸ், அந்தப் பெண்ணைக் கைது செய்தது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூருக்கு வந்த பணிப்பெண் ஸின், அந்த ஆண்டு மே 10ஆம் தேதியில் இருந்து மேற்கண்ட குடும்பத்தில், தனது பணியைத் தொடங்கினார். பணியைத் தொடங்கிய ஒரு மாதத்தில் தனது முதலாளியின் தாயார், இந்தியாவில் இருந்து வந்தார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும், சம்பவம் நடந்த இடமும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் நடந்த நாளன்று காலை 11.30 மணியளவில் பணிப்பெண் ஸின்னும், முதலாளியின் மாமியாரும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர். அந்த மூதாட்டி அங்கிருந்த சோபாவில் சாய்ந்துகொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அந்நேரம், சமையலறையில் இருந்த பணிப்பெண் ஸின், அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்துவந்து மூதாட்டியை பலமுறை குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்தக் கத்தியைச் சுத்தமாகக் கழுவி, இருந்த இடத்திலேயே அதை வைத்துவிட்டு, உடையை மாற்றிக்கொண்டு, அந்த வீட்டில் இருந்து கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
சுவா சூ காங்கில் உள்ள, தனது பணிப்பெண் முகவை அலுவலகத்திற்கு சுமார் 12.40க்குச் சென்றதாகவும், அவர் தன்னுடைய கடப்பிதழை வாங்குவதற்காகவே அங்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
பணிப்பெண் ஸின், முன்னதாக, ஜூரோங் ஈஸ்ட், புக்கிட் மேரா ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு மாலை 5.30 மணியளவில் டாக்சி மூலம் பணிப்பெண் முகவை அலுவலகத்திற்குச் சென்றார்.
சம்பவத்தை அறிந்துகொண்ட பணிப்பெண் முகவை அலுவலர்கள், இதுகுறித்து போலிசுக்குத் தகவல் கொடுத்தனர். அதனையடுத்து அந்தப் பணிப்பெண் கைதுசெய்யப்பட்டார்.
நேற்று நடந்த நீதிமன்ற விசாரணையில், கொல்லப்பட்ட மூதாட்டி தன்னை, சமையல் பாத்திரங்களால் தன் உடம்பின் பின்பகுதியிலும் தலையிலும் அடித்ததாகக் கூறினார்.
இன்னொரு சம்பவத்தில், அந்த மூதாட்டியின் கால் நகங்களை வெட்டிக்கொண்டிருக்கும்போது, தன் நெஞ்சுப்பகுதியில் ஓங்கி உதைத்ததாகவும் கூறினார்.
அந்த மூதாட்டி, மறுநாளே அந்தப் பணிப்பெண்ணை முகவரிடமே திருப்பி ஒப்படைக்கப்போவதாகக் கூறியதாகவும் விசாரணையில் பணிப்பெண் ஸின் கூறினார்.
இதைக்கேட்டதும் எனக்கு கோபம் தலைக்கேறியது. கத்தியை எடுக்கும்போது, நான் செய்வதறியாமல் இருந்தேன்," என்று கூறினார்.
கொல்லப்பட்டவரின் நகைகள் சம்பவ இடத்தில் அப்படியே கிடந்ததன.
இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தக் கொலைக்கு பணம் முக்கிய காரணமாக இருக்க முடியாது என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பணிப்பெண் ஸின், வேலையில் சேர்வதற்காக முகவருக்குக் கொடுப்பதற்காக அவர் $3,300 கடன் வாங்கியுள்ளது குறித்தும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் நாளைக்கு விசாரிக்கப்பட உள்ளது. அப்போது மேலும் ஆறு சாட்சிகள் விசாரிக்கப்படலாம்.
அவர்களில் போலிஸ் தரப்பில் நான்கு பேரும் தேசிய சுற்றுப்புற வாரியத்தைச் சேர்ந்த இருவரும் சாட்சியம் அளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.