பொதுப்பேருந்து ஒன்றில் மாடிப்பகுதியில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், முகக் கவசத்தை முழுமையாக அணியாமல் இருந்தார். அதை ஓட்டுநர் தனது இருக்கையில் இருந்தவாறு கண்காணிப்புக் கேமரா மூலம் அறிந்தார்.
உடனே பேருந்தை நிறுத்திவிட்டு, பேருந்தின் மாடிப்பகுதிக்குச் சென்று, அந்த ஆடவரிடம் முகக்கவசத்தை ஒழுங்காகப் போடும்படி வலியுறுத்திவிட்டு தனது இருக்கையில் வந்து உட்கார்ந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த முகமது ரீஸல் அப்துல்லா, 49 என்ற அந்தப் பயணி, ஓட்டுநரைப் பின்தொடர்ந்து வந்து, ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்புறம் நின்று கொண்டு சீனக் கிளைமொழியான ஹொக்கியன் மொழியில் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.
பொதுச்சேவை ஊழியரிடம் தகாத வார்த்தைகளால் திட்டிய அந்த ஆடவர் மீது அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
நேற்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், முகமது ரீஸல் அப்துல்லாவுக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் இரவு 7.30 மணிக்கு எஸ்பிஎஸ் பேருந்துச் சேவை 10ஆம் எண் பேருந்தில் நடந்தது. பொதுச்சேவை ஊழியர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களைத் தகாத வார்த்தையால் திட்டும் குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் $5,000 அபராதம், 12 மாதச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.