ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம் என்ற புதிய நடைமுறை நேற்று முதல் நடப்புக்கு வந்தது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பது அவசியம் என்று உணவு பான வர்த்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவகத்திற்கு இருவருக்கு மேல் உணவருந்த வந்தால், அடையாள அட்டை அல்லது சிங்பாஸ் செயலியில் உள்ள முகவரி சரிபார்க்கப்பட வேண்டும். சிறார்களுக்கு இத்தகைய அடையாள ஆவணங்கள் இல்லாத நிலையில், அவர்களது இருப்பிடம் குறித்து உறுதியளித்தால் உணவகங்களில் அவர்கள் அனுமதிக்கப்படலாம்.
"ஒரே குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்று பொய்த் தகவல் கூறுவோருக்கும் சரிபார்க்கத் தவறும் உணவு பான வர்த்தகங்களுக்கும் எதிராகக் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
"விதிமீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். உணவு பான வர்த்தகங்கள் உடனடியாக மூட வேண்டியிருக்கும். முதல் முறை விதிமீறுவோருக்கு இது பொருந்தும்," என்று கூறப்பட்டது.
இது தொடர்பான கூட்டறிக்கையை 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்', வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் மருத்துவ ரீதியாகத் தடுப்பூசிக்குத் தகுதிபெறாதவர்களுக்கு அனைத்து வளாகங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று நினைவுறுத்தப்படுகிறது. மருத்துவ ரீதியாக இவர்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாவிட்டாலும் கடைத்தொகுதிகள் மற்றும் உணவு பான வர்த்தகங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். இருப்பினும், கொவிட்-19 தொற்று ஏற்படும் சாத்தியமும் கடுமையாக நோய்வாய்ப்படும் சாத்தியமும் அதிகம்.
"இக்குறிப்பிட்ட பிரிவினர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பதிவுசெய்யப்பட்ட இசையும் நேற்றுமுதல் உணவு பான வர்த்தகங்களில் ஒலிக்க அனுமதிக்கப்பட்டது.