திருமண நிகழ்வுகளுக்கான 'ஆரஞ்சு பால்ரூம்' இடம் மற்றும் திருமண ஏற்பாட்டாளர் மீது கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதன் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனவரி 30ஆம் தேதியன்று நடந்த திருமணத்தில் அனுமதிக்கப்பட்ட 100 பேருக்குப் பதிலாக 235 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு ஆணை) சட்டம் 2020ன் கீழ், 59 வயது ஒஸ்மான் அரிஃபின் மீதும் 'ஆரஞ்சு பால்ரூம்' மீதும் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
இருதரப்பும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கேலாங் பகுதியிலுள்ள தஞ்சோங் காத்தோங் காம்பிளக்சின் மூன்றாவது மாடியில் 'ஆரஞ்சு பால்ரூம்' அமைந்துள்ளது. அதன் மூன்று வெவ்வேறு பகுதிகளில் திருமண விருந்து நடைபெற்றதாகக் கூறப்பட்டது. திருமணத்தில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதை ஒஸ்மான் உறுதிசெய்யத் தவறிவிட்டார் என்று கூறப்படுகிறது. அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட விருந்துகளில் 18 விருந்தினர்கள் கலந்துகொண்டதை அவர் அனுமதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் மீண்டும் வழக்கு விசாரணை தொடரும்.
வேறொரு சம்பவத்தில் பாதுகாப்பு இடைவெளி விதிகளை மீறியதன் தொடர்பில் பத்து பேர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் அறை ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவர்கள் அக்டோபர் 30ஆம் தேதியன்று கூடியதாகவும் அங்கு சண்டை மூண்டதால் போலிசார் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியதன் தொடர்பில் ஹோட்டல் மீது சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் விசாரணை தொடங்கியுள்ளது.