எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் வாடகை வீடுகளுக்கான சந்தை சூடுபிடித்து வருகிறது.
வெளிநாட்டிலிருந்து வரும் தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக சிறப்பு நுழைவுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை மேலும் பல நாடுகளுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளதால் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் வீவக, தனியார் அடுக்குமாடி வீடுகளை பலர் வாடகைக்கு எடுத்து வருகின்றனர். சிலர் மொத்தமாக சில குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டை குத்தகைக்கு எடுக்கின்றனர். கொண்டோமினிய வீடுகளுக்கான மாத வாடகை கடந்த மாதம் 1.3 விழுக்காடு அதிகரித்தது. இது, இதற்கு முந்தைய மாதமான செப்டம்பரில் 0.7 விழுக்காடாக இருந்தது என்று 99.கோ மற்றும் எஸ்ஆர்எக்ஸ் சொத்து இணையத்தளங்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டால் கொண்டோமினிய வீட்டு வாடகை 9.1 விழுக்காடு வரை கூடியது.
ஆனால் 2013ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்த 9.1 விழுக்காடு உச்சத்துடன் ஒப்பிட்டால் இது குறைவே.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் வீவக, தனியார் வீடுகள் ஆகிய இரண்டுமே பலன் அடைந்துள்ளன என்று 'ஆரஞ்சுடீ அண்ட் டை' சொத்து நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த உதவித் தலைவரான கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.
இவ்வாண்டு மே முதல் செப்டம்பர் வரை வாடகைக்கான தேவை பூஜ்யத்தில் இருந்தது என்றார் அவர். வீவக வீடுகளைப் பொறுத்தவரை வாடகைச் சந்தை தொடர்ந்து 16வது மாதமாக கடந்த மாதமும் அதிகரித்தது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாடகைச் சந்தை சற்று மந்தமாக இருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் தற்போது வீவக வாடகை 8.3 விழுக்காடு கூடியது, நான்கறை வீடுகளைத் தவிர மற்ற அனைத்து வீவக வாடகை வீடுகளுக்கான தேவை கடந்த மாதம் அதிகமாகவே இருந்தது. வீவக வீட்டை குத்தகைக்கு எடுப்பதும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் ஏறக்குறைய 1,751 வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 1,619ஆக இருந்தது.