உடல் எடையைக் குறைக்க உதவுவதாகக் கூறி கூவி விற்கப்படும் மூன்று மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம்(எச்எஸ்ஏ) பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.
'மேஜிக் மோச்சா', 'தாவோ மோக் ஹோ டிரோ கியாம் பியோ சென்லி', 'சிந்தியாஸ் பியூட்டி ஈஸிஎஸ்' காப்பித் தூள் ஆகியவை அந்த மூன்று மருந்துகளாகும்.
மூன்றிலும் தடை செய்யப்பட்ட சிபுட்ரமின் கலந்திருப்பதாகவும் அது தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆணையம் எச்சரித்தது.
அந்த மூன்று மருந்துகளைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களில் சிலர் தங்களுக்கு இதயப் படபடப்பு, தலைசுற்றல், ஒற்றைத் தலைவலி, தீராத தாகம் போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மூன்று மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் காலப்போக்கில் இதயப் பிரச்சினை, மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் குறைபாடு போன்ற மோசமான விளைவுகளுக்கு ஆளாக நேரிடலாம் என்று ஆணையம் கூறியது.
கேரோசெல், லஸாடா, ஷாப்பி, கியூஓஓ10, ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற தளங்களில் 'உடனே செயல்படும்', 'கொழுப்பைக் குறைக்கும்', 'கொழுப்புச் சேமிப்பைக் கரைக்கும்', 'கொழுப்பைச் சிதைத்து கரைக்கும்' போன்ற கவர்ச்சிகரமான வியாபார உத்திகளுடன் மூன்று மருந்துகளும் விற்கப்படுகின்றன.
இவற்றை விற்கும் விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டதால் மின்வர்த்தக தளங்களிலிருந்து மூன்று மருந்துகளும் அகற்றப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
'சிபுட்ரமின்' மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கக்கூடிய மருந்தாகும். இது, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததால் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.