பணிப்பெண்ணுக்கு ஒர்க் பர்மிட் ேகட்டு விண்ணப்பிக்கும் படிவத்தில் பொய்யான தகவல்களை அளித்த தம்பதிக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கே சியவ் ஹுவா, 58, அவரது கணவர் வூன் மெங் ஃபாட், 61 ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து பொய்யான தகவல்களை அளித்ததாகக் கூறப்பட்டது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி இதே குற்றச்சாட்டுக்காக பணிப்பெண் பிரான்டே ஜீன் டெல்மோவுக்கும் ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த 35 வயது பணிப் பெண் சிங்கப்பூரில் பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் தனது அலுவலகத்தின் விருந்தினர் தங்குவிடுதியில் வேலைக்குச் சேர்க்க டெல்மோவை திருமதி கே நேர்காணல் செய்தார்.
டெல்மோவுக்கு எஸ்-பாசுக்குப் பதிலாக ஒர்க் பர்மிட் விண்ணப்பிக்க இருவரும் சம்மதித்தனர்.
ஆனால் கேயின் வீட்டில் ஏற்கெனவே ஒரு பணிப்பெண் வேலையில் இருந்ததால் தமது கணவர் வூனை 'ஒர்க் பர்மிட்' விண்ணப்பிக்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து வூன் தமது சார்பில் ஒர்க் பர்மிட் விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். அதில் சிறப்பு உதவி ேதவைப்படும் தனது தாயாருக்கும் சகோதரருக்கும் பணிப்பெண் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து 2018 அக்டோபர் மாதம் டெல்மோ சிங்கப்பூர் வந்து அவரது வீட்டில் பணியாற்றத் தொடங்கினார்.
ஒரு வருடம் வேலை பார்த்த நிலையில் மூவரும் பொய்யான தகவல்களை அளித்த விவகாரம் தெரிய வந்தது.
2017 ஜூன் முதல் 2019 அக்டோபர் வரையில் தகுதியான வொர்க் பர்மிட் இல்லாமல் பீலிப்பீன்ஸ் நாட்டவரான அலின்சங்கன் என்பவரை பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியதற்காக நவம்பர் 2ஆம் தேதி திருமதி கேவுக்கு மேலும் 9,000 வெள்ளி அபராதம் விதிக்கப் பட்டது.