சுத்தம் செய்யும் ஊழியர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கும் உணவங்காடிகளுக்கும் கட்டணம் தொடர்பில் சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. சாப்பிட்டு முடித்ததும் தங்களின் தட்டுகளையும் மேசை மீதுள்ள குப்பைகளையும் வாடிக்கையாளர்களே அப்புறப் படுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் நடப்புக்கு வந்துள்ளது.
இந்நிலையில், அவ்விடத்தில் சுத்தம் செய்யும் ஊழியரது வேலைப் பளு குறைந்திருக்கும் என்று கூறி அவர்களின் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று உணவங்காடிகள் வாதிடுகின்றன. இருப்பினும், புதிய நடைமுறையால் பணியாளர்களின் பொறுப்புகளில் மாற்றம் உள்ளது என்றும் உணவங்காடி நிலையங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை அப்படியே உள்ளது என்றும் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. தட்டுகளை வாடிக்கையாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்ததும் அவற்றைப் பணியாளர்கள் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அந்தந்த கடைக்காரர்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டியுள்ளது என்றும் கூறப்பட்டது.