போதைப்பொருள் கடத்தியதற்காக சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கத்திற்கு அறிவுசார் செயல்பாட்டில் விளிம்புநிலை பிரச்சினை இருந்தது என்றும் ஆனால் அவருக்கு இலேசான அறிவுத்திறன் குறைபாடு இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கண்டறிந்ததாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கான சிங்கப்பூர்த் தூதர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நான்கு சிறப்பு ஐநா அறிக்கையாளர்கள் கூட்டாக அவசர மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில், தூதர் உமேஜ் பாட்டியா இவ்வாறு பதிலளித்தார்.
நாகேந்திரனுக்குச் சமூக உளவியல் சார்ந்த குறைபாடுகள் இருப்பதால் அவருக்கான மரண தண்டனையை சிங்கப்பூர் நிறுத்திவைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 29ஆம் தேதி அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த புதன்கிழமை நாகேந்திரன் தூக்கிலிடப்பட இருந்த நிலையில், அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி கடந்த 2015 பிப்ரவரியில் நாகேந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், இலேசான அறிவுத்திறன் குறைபாட்டால் அவர் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறி, 2017 செப்டம்பரில் உயர் நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட சான்றுகளில் நாகேந்திரனின் மனநல வல்லுநர் அளித்த சாட்சியமும் அடங்கும் என்றும் நாகேந்திரனுக்கு எவ்வித அறிவுத்திறன் குறைபாடும் இல்லை என்று அந்நிபுணர் ஒத்துக்கொண்டார் என்றும் திரு பாட்டியா குறிப்பிட்டார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது அனைத்துலகச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என்றும் மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே அத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அந்நான்கு ஐநா மனித உரிமைகள் நிபுணர்களும் வாதிட்டனர்.
அதற்குப் பதிலளித்த திரு பாட்டியா, மரண தண்டனைக்கு ஆதரவாகவும் அல்லது எதிராகவும் எவையெல்லாம் மிகக் கடுமையான குற்றங்கள் என்பது தொடர்பிலும் உலக அளவில் எவ்விதக் கருத்திணக்கமும் எட்டப்படவில்லை என்று சொன்னார்.
