வரும் 2030ஆம் ஆண்டுக்குள் காடுகளை அழிப்பதை நிறுத்தி அவற்றைத் திரும்ப உருவாக்குவதையும் நிலம் பாழ்படுவதைத் தடுத்து அவற்றை வளமாக்குவதையும் குறிக்கோளாகக் கொண்ட உறுதிமொழியில் சிங்கப்பூரும் கையெழுத்திட்டுள்ளது.
இந்த உறுதிமொழியில் 130க்கும் அதிகமான உலகநாடுகள் கையெழுத்திட்டுள்ளன. காடுகள், நிலப் பயனீடு தொடர்பான கிளாஸ்கோ தலைவர்கள் உறுதிமொழியை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வழி மொழிந்துள்ளதாக அமைச்சு நேற்று கூறியது.
கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் சிஒபி26 பருவநிலை மாநாடு நேற்று நிறைவுற்ற நிலையில் அமைச்சு இதைத் தெரிவித்தது.
சிஒபி26க்கு தலைமை வகிக்கும் பிரிட்டன், கடந்த 2ஆம் தேதி உறுதி மொழியை முன்வைத்தது. இதுவரை 130க்கும் அதிகமான நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இதன்வழி உலகக் காடுகளில் 91% உறுதிமொழியில் அடங்குகின்றன.
"சிங்கப்பூர், தேசிய, மற்றும் உலகளவிய பருவநிலைச் நடவடிக்கைகளைச் செயல்படுத்த கடப்பாடு கொண்டுள்ளது. காடுகளும் நிலப் பரப்புகளில் உள்ள சுற்றுச்சூழல் கட்டமைப்புகளும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
"இதனால் நீடித்த நிலைத்தன்மையுள்ள வழிகளில் நிலம் பயன் படுத்தப்படுவதையும் காடுகளைப் பாதுகாப்பதையும் உறுதிசெய்வது முக்கியம்," என்று தேசிய வளர்ச்சி அமைச்சு அதன் அறிக்கையில் கூறியது.
உறுதிமொழியை வழிமொழி வதன் மூலம், நகரை நீடித்த நிலைத்தன்மை உள்ள வகையில் மேம் படுத்தவும் தீவில் செழிக்கும் இயற்கையைப் பாதுகாக்கவும் தான் கொண்டுள்ள கடப்பாட்டை சிங்கப்பூர் மறுஉறுதிப்படுத்துவதாக அமைச்சு நேற்று குறிப்பிட்டது.
நிலப் பயன்பாட்டைத் திட்டமிடு வதில் சிங்கப்பூர் கொண்டுள்ள அணுகுமுறையில் நீடித்த நிலைத்தன்மையும் பொறுப்பான நிர்வகித்தலும் முக்கிய கோட்பாடுகள் ஆகும் என்று திரு லீ கூறினார்.