கரையோரப் பூங்காவில் 'கிங்ஃபிஷர் வெட்லேண்ட்ஸ்' எனும் புதிய கவர்ச்சித் தலம் திறக்கப்பட்டுள்ளது. இயற்கை ஆர்வலர்களும் புகைப்பட விரும்பிகளும் வனவிலங்குகளையும் தாவரங்களையும் கண்டுரசிக்க இது மற்றோர் இடமாக அமையும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று புதிய தலத்தைத் திறந்துவைத்தார்.
'சாத்தே பாய் தி பே' உணவங்காடி நிலையத்துக்கு அருகே புதிய கவர்ச்சித் தலம் அமைந்துள்ளது.
மீன்கொத்திப் பறவை ஏரி, தாமரைக் குளம் ஆகிய இரண்டு நீர்நிலைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்பு தனித்தனியாக இருந்த இரண்டு நீர்நிலைகளையும் தற்போது நடைபாதையின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இரண்டு ஓடைகள் இணைக்கின்றன.
இவையும் கற்குளத்தில் பாய்ந்து செல்லும் நீரும் அங்குள்ள நீரில் உள்ள உயிர்வாயுவை அதிகரிக்க உதவுவதாக கவர்ச்சித் தலத்தை வடிவமைத்த திருவாட்டி லீ பிங் பிங் கூறினார். இது நீரின் தரத்தை உயர்த்த உதவி செய்வதாகவும் அவர் சொன்னார்.
மேலும் அங்குள்ள சிறிய விலங்குகளை, பெரிய நீர்நிலைகளில் உள்ள பெரிய விலங்குகள் வேட்டையாட நேர்ந்தால் அப்போது சிறிய விலங்குகள் ஓடைகளில் தஞ்சம் அடையலாம் என்றார் அவர்.
இத்துடன், புதிய சதுப்புநிலப் பகுதியில் வனவிலங்குகளைப் பார்வையிடுவதற்கான கூடாரமும் மீன்கொத்திப் பறவைகளுக்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.
தாமரைக் குளத்தில் 200க்கும் மேற்பட்ட சதுப்புநிலத் தாவரங்கள் நடப்பட்டுள்ளன. இவற்றில் சில அழியக்கூடிய ஆபத்தில் உள்ள வகைகளைச் சேர்ந்தவை.
புதிய தலம் ஆறு மாதங்களில் கட்டப்பட்டது. அதற்கு கிக்கோமான் நிறுவனம் $500,000 நன்கொடையை வழங்கி உதவியது.