கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நாளை முதல் தென்கொரியாவுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள கதவு திறக்கப்படுகிறது.
இதற்கு பயணிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்தப் பயணம் பற்றி சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி தென்கொரியா செல்லும் பயணிகள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்காது. சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் இடம்பெறும் இத்தகைய முதல் பயண ஏற்பாடு இதுவே ஆகும்.
தென்கொரியாவில் குளிர்காலம் நெருங்குகிறது. பல சிங்கப்பூரர்களுக்கு இது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. கொரிய கலாசாரமும் சிங்கப்பூரர்கள் விரும்பும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான பயண ஏற்பாட்டின்கீழ், அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வரவிரும்பும் பயணிகள், தடுப்பூசி போட்டுக்கொண்டதைக் காட்டும் தங்கள் பத்திரங்களை இப்போது நேரடியாக தாக்கல் செய்யலாம்.
இவர்கள் மின்னிலக்க ரீதியில் தடுப்பூசி சான்றிதழைத் தாக்கல் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கி இருந்தார்கள்.
அந்தப் பயணிகள் இப்போது நேரடி சான்றிதழையும் தடுப்பூசி போட்ட நிறுவனத்தின் கையொப்பத்துடன் கூடிய கடிதத்தையும் தாக்கல் செய்யலாம் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
அவர்கள் மின்னிலக்கச் சான்றிதழையும் தாக்கல் செய்ய முடியும் என்று இந்த ஆணையத்தின் விமான நிலைய செயல்முறை, விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறை இயக்குநர் திருவாட்டி மார்கரெட் டான் நேற்றுத் தெரிவித்தார்.