அனைத்துலக அளவில் வர்த்தக நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வதில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ள சிங்கப்பூர், உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கும் 'புளூம்பெர்க் நியூ எகனாமி' கருத்தரங்கை (என்இஎஃப்) அமைதியான முறையில் ஏற்று நடத்துகிறது.
செந்தோசா தீவின் கப்பெல்லா ஹோட்டலில் கிட்டத்தட்ட 300 அனைத்துலக வர்த்தக, அரசாங்கத் தலைவர்கள் கலந்துகொண்டிருக்க, கருத்தரங்கில் கொவிட்-19 பரிசோதனைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தங்குதடையின்றி நடைமுறைப்படுத்தப்பட்டன.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளும் நிலையில் பெரிய கூட்டங்களில் கலந்துகொள்ளலாம் என்ற முன்னோட்டத் திட்டம் இவ்வாரம் தொடங்கியுள்ளது.
இதன்படி, இத்தகைய நிகழ்ச்சிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இந்த 'என்இஎஃப்' ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றார் 'புளூம்பெர்க் மீடியா'வின் அனைத்துலகத் தொடர்புப் பிரிவுத் தலைவர் பிரையன் ஸ்ட்ரோங். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகள் யாவும் முடிந்தவரை மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கருத்தரங்குக்கு வருகை தரும் உள்ளூர், வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். தினமும் அவர்கள் ஏஆர்டி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
நேற்றைய நிலவரப்படி பங்கேற்பாளர்களில் யாருக்கும் கொவிட்-19 தொற்று இல்லை. பங்கேற்பாளர்கள் வந்துபோக சிறப்புப் போக்குவரத்துப் பயண ஏற்பாடு உள்ளது. பாதுகாப்பு கருதி கார், டாக்சி இரண்டும் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆங்காங்கே சுவரொட்டிகள், அறிவிப்புகள், பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் மூலம் இடைவெளியைக் கட்டிக்காக்கவும் முகக்கவசத்தை எந்நேரமும் அணிந்திருக்கவும் நினைவூட்டல்கள் உள்ளன. இதற்கிடையே, ஐவராக அமர்ந்து சாப்பிடும் நடைமுறைஅனுமதிக்கப்பட்டுள்ளது.