சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி, ஆய்வாளர் எதிர்பார்ப்புகளையும் விநியோகத் தொடர் தடைகளையும் உடைத்தெறியும் வகையில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் அதிகரித்திருந்தது.
உலகெங்கும் கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் இருந்தாலும் மின்னணுவியல் பொருட்கள், மின்னணுவியல் சாரா பொருட்களின் ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பே இந்தப் புதிய உச்சத்திற்குக் காரணமாகும்.
கடந்த மாத எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தி, 17.9% அதிகரித்தது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதிவான 20.5% அதிகரிப்புக்குப் பிறகு ஆக அதிகமான விகிதம் இது.
புளூம்பெர்க் கணக்கெடுப்பில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்த 15.1% வருடாந்திர வளர்ச்சியைக் காட்டிலும் இம்முறை பதிவான வளர்ச்சி மேலும் துரிதமாக இருந்ததென 'என்டர்பிரைஸ் சிங்கப்பூர்' நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூரின் முதன்மை சந்தைகளுக்கான உற்பத்தி கடந்த மாதம் அதிகரித்தது. இருப்பினும், தாய்லாந்து, அமெரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி விகிதம் குறைந்தது.
அக்டோபர் மாத அதிகரிப்புக்கு சீனா, மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் கைகொடுத்ததாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
உருமாறிய 'டெல்டா' கிருமி மீண்டும் தலைதூக்கிய நிலையில் அண்மைய பொருளியல் வளர்ச்சியில் மந்தம் நிலவிய போதும் வட்டார நாடுகளின் பொருளியல் மீட்சி பாதிப்படையவில்லை என்பதை இதன்வழி அறிந்திட முடிகிறது என்கின்றனர்.
ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதி 10.6% வளர்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஜூலை மாதம் பதிவான 12.4% காட்டிலும் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.