சிங்கப்பூர் உணவங்காடி நிலையங்களில் முதன்முறையாக ஓர் அரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சார உற்பத்திக்கான உயிர்வாயுவை உணவுக் கழிவிலிருந்து பெறும் திட்டம், ஈஸ்ட் கோஸ்ட் லகூன் ஃபுட் வில்லேஜில் தொடங்கப்பட்டுள்ளது.
இக்குறிப்பிட்ட உணவங்காடி நிலையத்தின் சுமார் 60 கடைகளில் இருந்து ஒரே நாளில் கிட்டத்தட்ட 150 கிலோ உணவுக் கழிவு சேகரிக்கப்படுகிறது.
இது, உணவங்காடி நிலையத்தின் 31 சுவர் மின்விசிறிகளை இயக்குவதற்குத் தேவையான மின்சாரத்திற்குச் சமம் என்று கூறப்பட்டது.
இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரம், உரம் மற்றும் உயிர்வாயுவாக மாற்றும் அமைப்புமுறைக்குப் பயன்படுத்தப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், தேசிய பூங்காக்கள் கழகம் ஆகியவை தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இதற்குமுன் ஹோட்டல்கள் சிலவற்றில் இதுபோன்ற அமைப்புமுறை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், உணவங்காடி நிலையம் ஒன்றில் பொருத்தப்படுவது இதுவே முதல் முறை.
உணவுக் கழிவை உரமாக மாற்றி அதை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் தூவுவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரின் கழிவுகளற்ற சூழலுக்கான பெருந்திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெறும் ஓர் அம்சம் உணவுக் கழிவாகும் என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.