சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட முன்னோடி விமானப் பயணத் திட்டத்தின்கீழ் சுமார் 200 பயணிகள் ஆஸ்திரேலியாவில் நேற்று தரையிறங்கினர்.
அந்தத் திட்டத்தின்படி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியாவில் தரையிறங்கும் சிங்கப்பூர் குடிமக்கள் ஹோட்டலில் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. இதற்கு குடிமக்கள் அல்லாத மற்றவர்க்கு தகுதியில்லை.
சாங்கி விமான நிலையத்தில் இருந்து அந்தப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகாலை சுமார் 1.15 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
அது, சிங்கப்பூர் நேரப்படி காலை 8.08 மணிக்கு மெல்பர்னில் தரைஇறங்கியது. தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டிய தேவையின்றி, தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான பயண ஏற்பாடு நவம்பர் 8ஆம் தேதி தொடங்கியது.
அதையடுத்து சிங்கப்பூர் பயணிகள் தன் நாட்டில் தரையிறங்க ஆஸ்திரேலியா அனுமதித்து உள்ளது. என்றாலும் பயணிகள் எண்ணிக்கைக்கு அந்த நாடு வரம்பு விதித்து உள்ளது.
ஆஸ்திரேலியா புறப்பட்ட பயணிகள், விமான நிலையத்தில் வழக்கமான குடிநுழைவுப் பத்திரங்களோடு தடுப்பூசிச் சான்றிதழையும் தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை முடிவுகளையும் தாக்கல் செய்ய வேண்டி இருந்தது.
ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியதும் பயணிகள் 24 மணி நேரத்திற்குள் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்டவர்களில் திருவாட்டி ஃபுளோரா சங், 68, என்பவர் ஒருவர். இவர் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளில் முதன்முதலாக நேற்று ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியாவின் நிரந்தரவாசியாக இருக்கும் தன் புதல்வியைச் சந்திக்க இவர் சென்றுள்ளார்.
''தனிமை உத்தரவில்லா பயண ஏற்பாடு இல்லை என்றால் ஆஸ்திரேலியா செல்லும் முடிவை நான் எடுத்திருக்கமாட்டேன்," என்று திருவாட்டி சங் கூறினார். இவர் தனது 27 வயது புதல்வருடன் ஆஸ்திரேலியா சென்றார்.