கிருமி தொற்றிய 66 கைதிகள் தனிமை நிலையத்தில்
செலாராங் பார்க் வளாகத்தில் உள்ள தனிமை நிலையத்தில், நவம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி, கொவிட்-19 தொற்றுக்கு ஆளான 66 கைதிகள் இருந்தனர் என்று சிறைச்சாலை துறை கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. எல்லா சிறைகளையும் சேர்ந்த, தொற்றுக்கு ஆளான கைதிகள் சிலர் அந்த நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிறைச்சாலை துறை கூறியது.
செலாராங் பார்க் வளாகத் தனிமை நிலையம் சென்ற ஆண்டு ஏப்ரலில் செயல்படத் தொடங்கியது.
பொதுவாக, ஒரே சிறை அறையில் இதர கைதிகளுடன் சேர்ந்து இருந்த, தொற்று அறிகுறி வெளியே தெரியாத கைதிகள் அந்த தனிமை நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை துறை குறிப்பிட்டது. தனி அறையில் இருக்கும் கைதிகள், தொற்றில் இருந்து குணமடையும் போது அதே அறையில் தொடர்ந்து இருக்க சிறைச்சாலை துறை அனுமதிக்கிறது. கொவிட்-19 கிருமி தொற்றிய கைதிகளைத் தனிமை நிலையத்திற்கு அனுப்புவது என்ற முடிவு, சிறைச்சாலை துறை மருத்துவ அதிகாரி ஒருவருடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காரைத் தூக்கி பயணியைக் காத்த சிஸ்கோ அதிகாரிகள்
நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே இம்மாதம் 14ஆம் தேதி காலை நேரத்தில் இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு மாது ஒரு காருக்குக் கீழே சிக்கிக்கொண்டார். ஏறத்தாழ 12 பேர் காரை தூக்கி நிமிர்த்தி அந்த மாதை மீட்டனர்.
விபத்து நிகழ்ந்த சத்தம் கேட்டதும் செர்டிஸ் சிஸ்கோ பாதுகாவல் துறை அதிகாரிகள் முதலில் உதவிக்கு விரைந்தனர். உச்ச நீதிமன்றப் பணியில் இருந்த ஸ்டாஃப் சார்ஜண்ட் முகம்மது ஜமாலுதீன் சத்தம் கேட்டு ஓடி வந்தார். கவிழ்ந்து கிடந்த ஹோண்டா காரில் உடைந்த கண்ணாடித் துகள்களுக்கு இடையில் சிக்கி இருந்த ஓட்டுநரை முதலில் அவர் மீட்டார்.
காருக்குள் பெண் பயணி ஒருவர் சிக்கிக்கொண்டு உள்ளதாக அந்த ஓட்டுநர் சொன்னதைக் கேட்டு அந்த அதிகாரி திடுக்கிட்டார். அதற்குள் மேலும் சில சிஸ்கோ அதிகாரிகள் உதவிக்கு விரைந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த பலரும் உதவிக்கரம் நீட்டினர். எல்லாருமாகச் சேர்ந்து காரை மிகவும் கவனமாகத் தூக்கி அந்த மாதை மீட்டனர்.
கார்ப்பரல் ஹானிஸ் ஹருன் என்ற அதிகாரி சாலை யில் வாகனங்களைத் திருப்பிவிட்டு போக்குவரத்துத் தேக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். பிஎம்டபிள்யூ காரும் ஹோண்டா காரும் சம்பந்தப்பட்ட அந்த விபத்தில் காயமடைந்த ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து பற்றி போலிஸ் விசாரணை தொடர்கிறது.
1,931 பேருக்குத் தொற்று
சிங்கப்பூரில் சனிக்கிழமை புதிதாக 1,931 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களையும் சேர்த்து கொரோனா கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 250,518 ஆகியது.
வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் வெள்ளிக்கிழமை 0.77 ஆக இருந்தது. இது சனிக்கிழமை 0.78 ஆகக் கூடியது. கொரோனா காரணமாக 13 பேர் மரணமடைந்தனர். அவர்களுக்கு வயது 62 முதல் 98 வரை. மாண்டவர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. கொவிட்-19 மொத்த மரண எண்ணிக்கை 654 ஆகி உள்ளது.
புதிதாக கிருமி தொற்றியோரில் 1,867 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 333 பேருக்கு வயது 60 மற்றும் அதற்கும் அதிகம். வெளிநாட்டு ஊழியர் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் 58 பேர். ஆறு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று அமைச்சு தெரிவித்தது.
கடந்த இரண்டுவார காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவு பயனீட்டு அளவு குறைந்து வருகிறது. சனிக்கிழமை இந்த அளவு 56.8% ஆக இருந்தது.
அறப்பணிக்கு $350,000
அறப்பணி ஓவியக் கண்காட்சி மூலம் புற்றுநோயுள்ள சிறார்களுக்காக $350,000 திரட்டப்பட்டு இருக்கிறது.
ஓவியர் லின் லு ஸாய் மாணவர்கள் தீட்டிய 120 ஓவியங் களில் 78 ஓவியங்கள் விற்பனை மூலம் அந்தத் தொகை திரட்டப்பட்டது. வீவா புற்றுநோய் சிறார்கள் அறப்பணி அமைப்பு, ஆஸ்பிரேஷன் நுண்கலைச் சங்கம் ஆகியவை சேர்ந்து மேற்கொண்ட அந்த நிதித் திரட்டும் இயக்கத்துக்கு சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகம் வெள்ளிக்கு வெள்ளி நன்கொடை அடிப்படையில் உதவியது. தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ அறப்பணி கண்காட்சியைக் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
மனஎழுச்சியைத் தூண்டி சமூகங்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு என்றார் அமைச்சர். கண்காட்சி ஞாயிறுவரை அயோன் ஆர்ச்சர்ட் கலைக்கூடத்தில் நடந்தது.