தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தீபாவளி நாளிலும் தங்குவிடுதிகளை விட்டு விருப்பமான இடங்களுக்குச் செல்ல முடியாத வெளிநாட்டு ஊழியர் களின் உள்ளத்திற்கு உரமூட்ட விரும்பினர், சிங்கப்பூரின் கீதை வாசிப்புச் சங்கத்தைச் சேர்ந்த இளையர்கள்.
தீபாவளிப் பலகாரவகைகளுடன் நம்பிக்கையூட்டும் வாசகங்கள் கொண்ட அட்டைகளை இந்த சமய அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேர் கிட்டத்தட்ட 100 ஊழியர்களுக்கு வழங்கினர்.
இந்தத் தொண்டூழியர்களே தயாரித்து இவர்களுக்கு நவம்பர் 12ஆம் தேதி கம்போங் ஜாவா ரோட்டிலுள்ள ஓர் விடுதியில் விநியோகம் செய்தனர்.
முறுக்கு, பண்டுங் ஆகார் ஆகார், பாண்டான் ஜெல்லி, ஓட்ஸ் பிஸ்கட்டுகள் என சிங்கப்பூர் மணம் வீசும் பல்வேறு தின்பண்டங்கள் பொட்டலங்களில் இருந்தன.
"படிப்படியாக ஊழியர்கள் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வந்தாலும் முடக்கத்தினால் ஏற்பட்டுள்ள மன பாதிப்பு கடுமையானது," என்று சங்கத்தின் உறுப்பினரும் இம்முயற்சியில் கைகொடுத்தவர்களில் ஒருவருமான பவித்ரா சண்முகம், 28, கூறினார்.
"நம் சமூகத்தின்மீது ஊழியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கட்டிக் காக கடந்தாண்டைவிட இந்த ஆண்டுகளுக்கான முயற்சிகள் அதிகப்படியாக இருக்கவேண்டும் என்று நினைத் தோம். இதற்கு ஏற்பாடு செய்தோம்," என்று அவர் கூறினர்.
இரு மாதங்களுக்கு முன்னர் 'இட்ஸ்ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்' அமைப்பிடம் கட்டுமானத் தளத்தின் தொடர்பைப் பெற்று மற்ற ஆயத்தப் பணிகளைத் தங்களது அமைப்பினரே செய்துவந்ததாக பவித்ரா சொன்னார்.
உணவைச் சமைத்த தொண்டூழியர் களிடமிருந்து உணவைப் பெற்று, ஊழியர் தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு வழங்கினர்.
"ஆனால் கட்டுப்பாட்டு நடவடிக்கை களால் ஊழியர்களை எங்களால் நேரடியாக சந்திக்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.
"மூவர் மட்டுமே உணவைக் கொண்டு சென்றனர். அது எங்களுக்குச் சிரமமாக இருந்தபோதும் நிறைவைத் தந்தது.
பல்லாண்டுகளாக உணவு வழங்கும் பணியில் கீதை வாசிப்புச் சங்கம் ஈடுபட்ட வந்துள்ளபோதும் அது வெளிநாட்டு ஊழியர்களுக்கு இவ்வாறு உணவை விநியோகித்தது இதுவே முதல் முறையாகும்.
"இதுபோன்ற பணியைச் செயல்திறனுடன் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள முடிந்தது. இந்தச் சிறிய தங்குமிடத்திற்கு உதவிய அனுபவம் பயனுள்ளதாகவும் அமைந்தது," என்று சங்கத்தின் மற்றோர் உறுப்பினரான ரூபன் வர்மா, 27, குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் எளிதில் அதைச் செய்யலாம் என்று பகிர்ந்துகொண்ட தொண்டூழியர்கள், வரும் ஆண்டுகளில் கூடுதலாகச் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தனர்.
செய்தி: கி.ஜனார்த்தனன்