கேலாங்கில் திங்கட்கிழமை பிற்பகல் (நவம்பர் 22) இரு கார் ஓட்டுநர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்த போலிஸ், தன்னிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் விசாரணை நடைபெறுவதாகவும் கூறியது. எனினும், அதுபற்றி மேல்விவரம் எதையும் போலிஸ் சொல்லவில்லை.
சிம்ஸ் அவென்யூ, லோரோங் 39 கேலாங் சந்திப்பில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் இந்த அடிதடி ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
அவ்விரு ஆடவர்களும் சாலையோரத்தில் அடிதடியில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. தத்தம் கார்களில் இருந்து இறங்கியவுடன், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷத்துடன் அடித்துக்கொண்டனர்.
பின்னர் சாலையோரம் இருந்த புல்வெளியில் புரண்டவாறு ஒருவர் மற்றொருவரை அடக்க முற்பட்டனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் நீடித்தது. அப்போது அவர்களது கார்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அவ்வழியாகச் சென்ற போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
நிறுத்தப்பட்டிருந்த அந்த கார்களில் இருந்து வெளியேறிய மாது ஒருவர், சண்டையை நிறுத்த முற்பட்டார்.
பின்னர் வழிப்போக்கர்களில் மூவர் வந்து தலையிட்டு, ஒருவழியாக சண்டையை நிறுத்தினர்.
அதன் பின்னர், அந்த இரு ஓட்டுநர்களும் தத்தம் கார்களுக்குத் திரும்பினர்.
இந்த அடிதடியில் அவர்களில் எவருக்காவது காயங்கள் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. இதன் தொடர்பில் தனக்கு உதவி கோரி அழைப்பு எதுவும் வரவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.