உணவங்காடி நிலையத்திற்குச் சென்று உணவருந்தும்போதெல்லாம் சாப்பிட்டபின் அசுத்தமாக மேசையை வைத்துவிட்டு செல்வோரிடம் பரிவாக சுத்தம் செய்துச் செல்லும்படி கூறி வருபவர் 42 வயது துரைசாமி செந்தி.
பல ஆண்டுகளாக அதை வழமையாகவே கொண்ட அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தேசியச் சுற்றுப்புற அமைப்பின் ‘சுத்தம், பசுமை தூதுவராகவும்’ சேவையாற்றிவருகிறார். அதிலும் கடந்த ஓராண்டாக அணித் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
இந்த உலகம் நம் அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான இடமாக இருப்பதை உறுதிசெய்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்கிறார் அவர். மேலும் நமது சுற்றுப்புறம் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் நம் பங்கை ஆற்றி சுத்தமாக வைத்திருக்கக் கடப்பாடுகொள்வோம் என்றார் செந்தி.

சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்பது நம் அனைவரின் தலையாய பொறுப்பாக இருக்கவேண்டும். சிங்கப்பூர் உலக அரங்கிலேயே சுத்தமான பசுமையான நாடு என்ற பேரை பெற்றுள்ளது. அது நமது முன்னோடிகள் அமைத்து கொடுத்த கட்டமைப்பு. மேலும் அதற்காக அரும்பாடுபட்டு ஆண்டாண்டுகளாக ஆரோக்கியத்தையும் சுத்தத்தையும் பசுமையையும் கண்ணும் கருத்துமாக கவனித்து உறுதிசெய்துள்ளனர்.
நாம் இந்த உலகத்தின் நீடித்த நிலைத்தன்மைக்கும் நம் வருங்கால தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் முதல் படியாக நம் சுற்றுச்சூழலை கவனமாக பராமரித்துக்கொள்ளவேண்டும்.
இல்லங்களைத் தாண்டி உணவங்காடி, உணவகம் போன்றவற்றில் உணவு விரயத்தைக் குறைப்பது, பொது இடங்களில் நாம் உபயோகிக்கும் இடங்களைப் பயன்படுத்தியபின் அதனை சுத்தம் செய்வது, பசுமையைப் போற்றுவது, மரக்கன்றுகள் நடுவது, தண்ணீரை விரயமின்றி பயன்படுத்துவது, குப்பைகளைப் பொறுப்புடன் குப்பைத் தொட்டியில் போடுவது என எண்ணிலடங்கா வழிகளில் நாம் நம் சுற்றுப்புறத்தைப் பேணிக் காக்கமுடியும்.
மறுசுழற்சி, மறுபயனீடு செய்வது, குறைத்து பயன்படுத்துவது போன்ற வழிகளிலும் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கலாம் என்றார் செந்தி. முதலில் குடும்பமாக முயற்சியில் இறங்கவேண்டும் என்ற அவர், தமது ஏழு வயது மகளுக்கும் அதுகுறித்து விளக்கிவருவதாகக் கூறினார்.
“பொறுப்புடன் நாம் செய்யும் செயல்களுக்கு மாற்றங்களை நம்மால் காணமுடியும். நாம் நல்ல செயல்களைச் செய்வது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் அது குறித்த விளக்கங்களை எடுத்துரைக்கலாம். நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் என அனைவருக்கும் நான் இதுகுறித்து பகிர்ந்துவருகிறேன்,” என்றார் கொண்டோமினிய மேலாளராகப் பணிபுரியும் அவர். தமது வேலையிலும், சேவையிலும் அதற்கு வெளியிலும், மற்றவர்களுக்கு உதவி செய்வதை விரும்பி செய்யும் அவர், சமுதாயத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்ததாகவும் அதனால் சுத்தம், பசுமையை முன்னிறுத்தி தமது சேவையைப் புரிந்துவருவதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு சிலருக்கு எடுத்துச் சொல்லும்போது, “இது உங்கள் வேலை இல்லையே. அதுதான் துப்புரவாளர்கள் உள்ளனரே. இதைத் துடைக்கதானே அவர்களுக்குச் சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். நான் ஏன் மேசையைத் துடைக்கவேண்டும். என்னை செய்யும்படி சொல்லும் உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை,” என்றெல்லாம் சிலர் செந்தியிடம் கூறியுள்ளனர்.
அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் பயன்படுத்தும் பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று அவர் பதிலளித்துள்ளார்.
சுத்தமும் பசுமையும் எவ்வளவு முக்கியம் என்பதை செந்தி பகிர்ந்ததுபோல வீண் விரயம் செய்வதும் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிப்பையே என்று கூறி தமது அனுபவத்தைப் பகிர்ந்தார் 53 வயது டேனி லிம்.

மின்-குப்பைகள் என்று அடையாளம் காணப்படும் மின்னியல், மின்சாரம் சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை, சாதனங்களை மறுபயனீடு செய்வதை ஊக்குவித்து வருகிறார் டேனி. அவர் பெரும்பாலும் புதிய சாதனங்கள் வாங்குவதைத் தவிர்க்கிறார். பழுதடைந்த சாதனங்களைத் தம்மால் முயன்ற அளவிற்கு பழுது நீக்கி மீண்டும் பயன்படுத்திக்கொள்கிறார். அவ்வாரே அனைவரும் செய்யுமாறும் ஊக்குவிக்கிறார்.
“ஒவ்வொரு முறையும் பழுதான ஒரு சாதனத்தை அகற்றி நாம் கடைக்குச் சென்று புதியவற்றை வாங்கும்போதெல்லாம் நாம் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்கிறோம் என்பதை நாம் அறியவேண்டும். அடிப்படையில் நாம் பயன்படுத்தும் உபயோகப் பொருட்களை சரிவர அவ்வப்போது சீர்செய்து வந்தால் அவை நீடித்து இயங்கும்,” என்றார் டேனி.
கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் ‘சஸ்டைன்பல் லிவிங் லேப்’ எனும் நிறுவனத்தில் சமூக புத்தாக்க தலைவர் என்ற பொறுப்பை வகிக்கும் டேனி, அதற்கு முன்னர் சொந்த பழுது நீக்கும் நிறுவனத்தை நடத்தி வந்த பொறியியலாளர். தற்போது தாம் பணிபுரியும் நிறுவனத்தின் மற்றொரு சமூகப் பொறுப்பு அமைப்பான ‘ரிப்பேர் கோப்பிதியாம்’ என்பதிலும் தமது பங்கை ஆற்றிவருகிறார்.
இனி தேவையில்லை என்று நினைத்து குப்பையில் வீசும் பொருட்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வாய்ப்பை ‘ரிப்பேர் கோப்பிதியாம்’ சமூக அமைப்பு வழங்குகிறது. மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் சிங்கப்பூரில் ஐந்து இடங்களில் பழுது நீக்கும் திறன்களைப் பகிரும் பட்டறைகளை நடத்திவருகிறது இந்த அமைப்பு. அதன்மூலம் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள மின்சார சாதனங்களைப் பழுது நீக்குவதுடன் அந்தத் திறன்களையும் படிப்பினைகளையும் கொண்டு தொடர்ந்து மற்ற பொருட்களுக்கும் அவ்வாறே பழுது நீக்கி சுற்றுப்புறத்திற்கு பங்கம் விளைவிக்காத வண்ணம் இருக்க வழிசெய்கிறது.
பல்லாண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றி, சேவையாற்றி வரும் டேனி, பழுது நீக்குவதில் கைதேர்ந்தவர். அவருக்கு மின்சாரப் பொருட்கள் பலவற்றையும் முழுமையாகப் பிரித்து எடுத்து, என்ன குறை என்று கண்டறிந்து, அவற்றை மாற்றியோ பழுது பார்த்தோ முடித்தபின் மீண்டும் எப்படி ஒன்று சேர்த்து மாட்டப்பட்டதோ அவ்வாறே அவற்றை சீர்படுத்தக்கூடிய திறன் பெற்றுள்ளார்.
அந்தத் திறனை மற்றவர்களுடனும் பகிரவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடைய அவர், ‘ரிப்பேர் கோப்பிதியாம்’ போன்ற வழிகளில் ஆற்றலை மற்றவர்களுக்குப் பகிர்ந்து வருகிறார்.
“அதிகமாக மக்கள் பழுது நீக்க எடுத்து வரும் சாதனம் மின்விசிறி. குறிப்பாக தரையில் நிற்கும் மின்விசிறி. அவற்றை எளிதில் பழுது நீக்கலாம். பெரும்பாலும் ‘பேரிங்’ என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய பொருளே மின்விசிறி பழுதடையக் காரணமாக உள்ளது. குறைந்த செலவில் அந்த உபரிப் பொருளை மாற்றிவிட்டால் போதுமானது,” என்று உற்சாகத்துடன் கூறினார் டேனி.
“ஆனால் பலர் மின்விசிறி பழுதடைந்துவிட்டது என்று கூறி குப்பையில் வீசிவிடுகின்றனர். அதைப் பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. வீணாக சுற்றுப்புறத்தை நாம் பாதிப்படையச் செய்கிறோம்,” என்று அவர் சொன்னார்.
இன்றைய மின்னியல் உலகில் எல்லாமே எல்லாருக்கும் சுலபமாகிவிட்டது. முக்கியமாக புதியவற்றை வாங்குவது எளிதான ஒன்றாகிவிட்டது.
“யாரும் எந்த நேரத்திலும் தங்கள் வீட்டிலேயே அமர்ந்து புதிய பொருட்களை வாங்கக்கூடிய வசதியை மின்னியல் வர்த்தகம் அமைத்து கொடுத்துள்ளது. வீண் விரயம் இன்னும் அதிகரிக்க அதுவும் ஒரு காரணமாக ஆகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று டேனி கருத்துரைத்தார்.
இதுபோன்ற தருணத்தில் தான் மக்கள் அனைவரும் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். முடிந்தவரையில் தங்களிடம் உள்ள பொருட்களை எந்த வகையில் மறுபயனீடு செய்யலாம் என்றும் அப்படி பழுதாக இருந்தால் முயற்சி எடுத்து அவற்றுக்கான பழுதை நீக்கலாம் என்பதையும் ஆராயலாம்.
பொங்கோல் வட்டாரத்தில் கொண்டோமினியம் வீடமைப்பில் வசிக்கும் டேனியின் வீட்டில் இரண்டு அறைகளை பழுது நீக்குவது, மறுபயனீடு செய்வது போன்ற பணிகளுக்காக ஒதுக்கிவைத்துள்ளார். வீணாக தூக்கி வீசக்கூடாது, நன்றாக இயங்கும் பொருட்களை ஏன் வீசவேண்டும் என்ற கோட்பாடுகள் அவரது வாழ்வில் தமக்கு உதவி வருகின்றன.
அடுக்குமாடி வீடமைப்புக் கட்டடங்களின் வெற்றுத் தளங்களில் வீசப்படும் சாதனங்கள், பழைய சாதனங்களை சேகரிப்போரிடம் பெறுவது போன்ற வழிகளில் டேனி பழுது நீக்குவதற்கான பொருட்களை பெறுகிறார்.
‘காரங்குனி’ என்றழைக்கப்படும் பழைய சாதனங்களைச் சேகரிப்போரிடம் பொருட்களைப் பெற்று இலவசமாகவே தமது ஆற்றலைக் கொண்டு பழுது நீக்கி அவர்களிடம் கொடுக்கிறார்.
“பெரும்பாலும் சாதனங்களில் பழுதாகி இருக்கும் உபரிப் பாகங்கள் $2 அல்லது $5 கிடைக்கும். அல்லது முற்றிலும் பயன்படுத்த முடியாத சாதனங்களின் உபரிப் பாகங்களை நான் சேகரித்து வைத்துள்ளேன். அவற்றைக் கொண்டு பழுது நீக்கும் பணியை முடித்து விடலாம். அதனால் உடல் உழைப்பைச் செலுத்தி முயற்சி செய்து பழையப் பொருட்களை விற்பவர்களிடம் நான் கட்டணம் வாங்காமலேயே இந்தச் சேவையை செய்கிறேன். அடிப்படையில் சுற்றுப்புறத்தின் நன்மைக்குத் தானே,” என்றார் டேனி.
நாற்காலி உடைந்தாலோ, ‘ஜீன்ஸ்’ ஆடைகள் அல்லது மற்ற ஆடைகளை கிழிந்திருந்தாலோ அவற்றை சரிசெய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே அவரின் வாதம். அதைச் சமூகத்துடன் இணைந்து செய்தால் அனைவருக்கும் பலன் தரும் மேலும் சுற்றுப்புறத்தையும் நீடித்த நிலைத்தன்மையுடன் போற்ற முடியும் என்பது ‘ரிப்பேர் கோப்பிதியாம்’ அமைப்பின் நோக்கம்.
பொறுமை, கட்டுப்பாடு, விடாமுயற்சி போன்ற நன்னெறிகளைக் கற்றுக்கொள்ளவும் இதுபோன்ற மறுபயனீட்டு முயற்சிகள் நமக்கு அளிக்கின்றன. டேனி போன்ற தொண்டூழியர்கள் மாதம் ஒருமுறை மக்களுக்கு பழுது நீக்கும் திறன்களைக் கற்றுக்கொடுக்கும் தருணத்தில் சிங்கப்பூரையும் இந்த உலகையும் சுத்தமான, பசுமையான இடமாக வைத்திருக்க நாம் நம் பங்கை ஆற்ற முடியும்.
செந்தி, டேனி இருவரும் சுற்றுப்புறத்துடன் ஒன்றிணைந்து தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் பொருட்டு நாம் அனைவரும் நம் பங்கை எத்தனையோ வழிகளில் ஆற்றி நாம் வாழும் உலகை மேம்படுத்தலாம்.
பொது இடங்களையும் சுற்றுப்புறத்தையும் நாம் பாதுகாக்கவும் பரிவுகாட்டவும் சுத்தமான, பசுமையான, நீடித்த நிலைத்தன்மைக்கு உகந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவோம்.
வாழக்கூடிய, மனதிற்கு இதமான இல்லத்தை நாம் உருவாக்குவோம். நிலம், நீர் தளங்களைப் பாதுகாப்போம். நம் நகரங்களிலும் இல்லங்களிலும் திறன் சார்ந்த தொழில்நுட்பத்தையும் சுற்றுப்புறத்திற்கு உகந்த அம்சங்களையும் அரவணைப்போம். பசுமையான வாழ்க்கைமுறையை வலியுறுத்தும் தடையற்ற போக்குவரத்து கட்டமைப்பையும் நாம் பயன்படுத்துவோம்.
துடிப்புமிக்க, நீடித்த நிலைத்தன்மைமிக்க நகரத்தையும் நாம் பேணிக்காப்போம். பசுமைப் பொருளியலில் முன்னோடியாகவும் அநாவசிய குப்பைகளற்ற தேசமாகவும் நாம் பரிணமிக்க தேவையான உள்கட்டமைப்பு, திட்டங்கள், வேலைகளை அரசாங்கம், சமூகம், வர்த்தகங்கள் ஒன்றிணைந்து செயல்படுத்துவோம்.
அதற்கான முதல் படியாக அனைவரும் நம் பங்கை ஆற்றுவோம்.
நம்மால் முடிந்த அளவிற்கு நம் இல்லம், நகரம், நாடு சுத்தமாக இருப்பதற்கான முயற்சியில் முழு மூச்சாக இறங்குவோம். பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது நம் பொறுப்பு என்பதை நினைவில் கொள்வோம். வீடமைப்பு எரிசக்தி பயன்பாடு சீரிய முறையில் இயங்குவதை உறுதிசெய்து வீண் விரயத்தைக் குறைப்போம். முடியாத பட்சத்திலேயே பொருட்களைத் தூக்கி வீசுவோம். இல்லாவிடில் அவற்றை நாம் மறுபயனீடு செய்வோம்.
ஒன்றிணைந்து நமது சுற்றுப்புறத்தைப் பாதுகாப்போம்.
சுத்தமான, பசுமையான சிங்கப்பூர் நமது கனவு இல்லத்தைக் கட்டி, நிர்வகிக்க சமூகங்கள், தனிநபர்கள், அமைப்புகளுடன் இணைந்து தேசியச் சுற்றுப்புற அமைப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த சுத்தமான, பசுமையான சிங்கப்பூர் இயக்கம். இதன்மூலம் பொது வெளிகளைப் பரிவுடன் பார்த்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் சிங்கப்பூரர்களை ஊக்குவிப்பதுடன் கருணையுள்ள சமூகமாகவும் நீடித்த நிலைத்தன்மைமிக்க வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கவும் பசுமை வெளிகளையும் நீரணைகளையும் பாதுகாக்கவும் ஊக்கம் தருகிறது. மேலும் கழிவுகளற்ற தேசமாகவும் பசுமைப் பொருளியலை நோக்கிய நாடாகவும் சிங்கப்பூரை இட்டுச் செல்கிறது. ஒன்றிணைந்து நமது சுற்றுப்புறம் மீது பரிவுகாட்டுவோம் என்பதே இந்த இயக்கத்தின் கருப்பொருள். அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த முயற்சியில் இறங்கவேண்டும் என்பதை அது வலியுறுத்துவதாக உள்ளது. வீட்டிலும் வேலையிலும் சுற்றுப்புறத்திற்கு ஏதுவான வாழ்க்கைமுறையை ஒவ்வொருவரும் பின்பற்றலாம். நண்பர்கள், அண்டை வீட்டாருடனும் இணைந்து பகிர்ந்து முயற்சி எடுக்கலாம். சுற்றுப்புறத்தை எவ்வாறு பார்த்துக்கொள்ளலாம் என்பது குறித்து மேலும் அறிய, www.cgs.gov.sg/cgs2021 எனும் இணையப்பக்கத்தை நாடலாம் அல்லது இந்த இயக்கத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட “CGS Experiences” எனும் இணையக் கல்வி அனுபவத்தில் ஈடுபடலாம். வீட்டில் இருந்தபடியே மெய்நிகர் வழி பொதுமக்கள் சுற்றுப்புறத்தின்மீது ஆர்வமுடைய இடங்களைப் பார்வையிடலாம். அந்த மெய்நிகர் அனுபவத்தால் நீடித்த நிலைத்தன்மைக்கும் சுழலும் பொருளியலுக்கும் பல அமைப்புகள் அளித்துள்ள புத்தாக்க பங்களிப்புகளைப் பற்றி பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்ளலாம். எளிதில் பொதுமக்கள் செல்லமுடியாத இடங்களே இந்த மெய்நிகர் தளத்தில் காட்சி தருகின்றன.நேரலையில் தொகுப்பாளருடன் இணையக் கருத்தரங்கு வடிவில் உள்ள இந்த அங்கத்தில் புதிர்போட்டிகளும் கேள்வி பதில் அங்கமும் அடங்கும்.
பொதுமக்கள் இத்தகைய நிகழ்வுகளில் கலந்துகொள்ள குறிப்பிட்ட இடங்களே உள்ளன. www.cgs.gov.sg/cgsexperiences எனும் இணையத்தளத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை இந்த நிகழ்வுக்கான பதிவை மக்கள் மேற்கொள்ளலாம். அதோடு, அந்த அனுபவத்தைத் தாண்டிய பங்களிப்புக்கு தேசியச் சுற்றுப்புற அமைப்பில் தொண்டூழியராகச் சேர்ந்துகொள்ளலாம். அதற்குப் பதிவு செய்வதற்கு www.cgs.gov.sg/how-can-we-act/volunteer எனும் இணையத்தளத்தை நாடலாம்.
