நீண்ட இடைவெளிக்குப் பிறகு உணவங்காடி நிலையங்களுக்கும் காப்பிக்கடைகளுக்கும் வாடிக்கையாளர் கூட்டம் நேற்று திரும்பியது.
இவ்விடங்களில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த அதிகபட்சம் ஐவர் கொண்ட குழுக்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த நே்றறு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உணவருந்த வரும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களா என்பதைச் சரிபார்க்கக்கூடிய 11 உணவங்காடி நிலையங்களும் ஏழு காப்பிக்கடைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போதைக்கு இந்த இடங்களில் மட்டும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த அதிகபட்சம் ஐவர் கொண்ட குழுக்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களா என்பதை சரிபார்க்கும் அணுகு
முறையை நடைமுறைப்படுத்த முடியாத உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் அதிகபட்சம் இருவர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையைவிட நேற்று வாடிக்கையாளர்கள் பலரைப் பார்க்க முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய உணவுக்கடைக்காரர்கள் பலர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஹவ்காங், அட்மிரல்ட்டி, தியோங் பாரு, ஹாலந்து வில்லேஜ் போன்ற வட்டாரங்களில் உள்ள உணவங்காடி நிலையங்களுக்கும் காப்பிக்
கடைகளுக்கும் நேற்று காலையிலும் மதிய உணவு நேரத்துக்கு முன்பும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றிருந்தனர்.
அட்மிரல்ட்டி வட்டாரத்தில் உள்ள கம்போங் அட்மிரல்ட்டி உணவங்காடி நிலையத்தில் நேற்று காலை கூட்டம் அலைமோதியது.
மதிய நேரத்தில் தியோங் பாருவில் உள்ள பியோ கிரசெண்ட உணவங்காடி நிலையத்துக்கு வாடிக்கையாளர்கள் பலர் திரண்டனர்.
ஹவ்காங்கில் உள்ள சி யுவேன் உணவங்காடி நிலையத்திலும் ஹாலந்து வில்லேஜ் சந்தை, உணவங்காடி நிலையத்திலும் நேற்று காலை பாதி அளவு இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தன.