சிங்கப்பூரின் முதல் வகுப்புப் பாடமில்லா, ஆசிரியரில்லாக் கணினி அறிவியல் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற பல்கலைக்கழகமான எக்கோல் 42, சிங்கப்பூர் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து
இந்தத் திட்டத்தை வழங்குகின்றன.
18 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.
குறியீட்டு முறை, கணிதம் ஆகிய துறைகளில் பயிற்சி பெறாதவர்களும் பதிவு செய்துகொள்ளலாம்.
'42 சிங்கப்பூர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்துக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆதரவு வழங்குகிறது.
மின்னிலக்கப் பொருளியலுக்குத் தேவையான தொழில்நுட்பத் திறனாளர்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் இலக்கு.
வகுப்பில் பாடநூல்களைப் பயன்படுத்தி ஆசிரியர் பாடம் நடத்துவதற்குப் பதிலாக, ஒப்படைப்பு அடிப்படையில் மாணவர்கள் இணையப் பாதுகாப்பு, கட்டமைப்பு உள்கட்டமைப்பு போன்ற தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொள்வர்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் முதல் 150 மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துப் பயில்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓராண்டுக்கு ஒருமுறை அல்லது கூடுதல் மாணவர் சேர்க்கைப் பயிற்சிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.