கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் பொது நூலகங்களுக்கும் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்துக்கும் செல்ல முடியாது என்று தேசிய நூலக வாரியம் அறிவித்துள்ளது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் அவ்விடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும்.
கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்று மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் நூலகங்களுக்குள் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அடுத்த மாதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் நூலகங்களுக்குச் செல்ல முடியும். மருத்துவப் பரிசோதனையில் அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்
படுத்தப்பட்டதும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.
மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெறாதவர்கள், கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்கள், 12 வயதும் அதற்கும் குறைந்த சிறார் ஆகியோர் அடுத்த ஆண்டு நூலகம் செல்ல அனுமதிக்கப்படுவர்.
நூலகத்தில் இருப்பவர்கள் சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.