கடல்சார் தொழில்நுட்பத்தின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற குடியரசின் லட்சியத்தை அடையும் நோக்கத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் 2025ஆம் ஆண்டுக்குள் புதிதாக தொழில் தொடங்கும் கடல்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 100லிருந்து 150ஆக உயர்த்துகிறது என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டிற்குள் 100 புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் என்ற முந்தைய இலக்கு கடந்த மார்ச் மாதத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே இப்போது புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் எண்ணிக்கை 30 ஆக மட்டுமே உள்ளது.
நேற்று நடைபெற்ற கடல்துறைத் தொழில்நுட்பப் போட்டியின் இறுதிச் சுற்றில் திரு சீ பேசுகையில், நீட்டிக்கப்பட்டுள்ள இலக்கை அடைவதற்கான முயற்சிகளுக்கு உதவ வேண்டும் என்று நிதி மற்றும் உத்திபூர்வ நடவடிக்கைகளை அறிவித்தார்.
"இதை எங்களால் அடைய முடியுமா என்று 100 விழுக்காடு உறுதியாக தெரியவில்லை. ஆனால் நாங்கள் அந்த இலக்கை அடைய கடும் முயற்சி எடுக்கத் தயாராக இருக்கிறோம்," என்றார் அமைச்சர்.
கடல்துறைத் தொழில்நுட்பத்தில் அரசாங்கத்தின் கவனம், செயற்கை நுண்ணறிவு, தானியங்கிக் கப்பல்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளில் உள்ளது. அது தொற்றுநோய் காலத்திலிருந்து வெளிப்படும் சிங்கப்பூரின் கடல்துறை வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறது.
சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) புத்தாக்கம் மற்றும் வணிகத்தை ஊக்குவிக்க பல வழிமுறைகளை அமைத்துள்ளது. இவற்றில் ஒன்று Port Innovation Ecosystem Reimagined @ Block71, அல்லது Pier71 எனும் வழிமுறை. இது புதுமையான யோசனைகளைக் கொண்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் தொழில்நுட்பப் பங்காளிகள், முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருடன் அவர்களை இணைப்பதற்கும் உகந்த அமைப்பை உருவாக்குகிறது.
"எம்பிஏ தனது உடல் மற்றும் மின்னிலக்க பகிர்வு, சோதனைத் தளம் மற்றும் பரிசோதனைகளை ஆதரிக்கிறது. அவற்றை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் தொடங்கினோம்.
"மெரினா சவுத் படகுத் துறையில் உள்ள கடல்துறை ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தளம், கடற்கரையிலிருந்து கப்பல் விநியோகம் மற்றும் தொலைதூரக் கப்பல் ஆய்வுகள் போன்ற கடல்சார் பயன்பாடுகளுக்கான ட்ரோன் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு உகந்த இடத்தை வழங்குகிறது.
"கடல்துறை ட்ரோன் தளம், கடல்சார் ஆளில்லா வானூர்தி தங்களுடைய பொருட்களைச் சோதிப்பதற்காக நியமிக்கப்பட்ட இடம்.அதாவது சிங்கப்பூரின் கடற்கரைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களுக்கு முப்பரிமாண முறையில் உருவாக்கப்பட்ட கப்பல் பாகங்களை வழங்குவது போன்றவை," என்று திரு சீ விவ ரித்தார்.