வேலையிடத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, தாம் பணிபுரிந்த நிறுவனத்தை ஏமாற்ற முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து இந்திய ஊழியர் விடுவிக்கப்பட்டார். இழப்பீடு பெறுவதற்காக போலியான கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததாகவும் விசாரணை அதிகாரியிடம் பொய்யுரைத்ததாகவும் கடந்த 2019 ஏப்ரல் 8ஆம் தேதி கிர்பால் சிங், 24, என்ற அந்த ஆடவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதே ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பணியிடத்தில் அரைவை இயந்திரத்தை இயக்கியபோது அவரது கட்டை விரலில் காயமேற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று அவர் மீதான குற்றச்சாட்டுகளை மனிதவள அமைச்சின் வழக்கறிஞர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து, முன்னாள் கட்டுமான ஊழியரான கிர்பால் சிங் கடு மையாக எச்சரிக்கப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவர்மீதான குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டதற்கான காரணம் எதுவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. ஆயினும், போதுமான சான்று இல்லாததால் அவை மீட்டுக்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
நாடு திரும்பியபின் அமிர்தசரசில் சிறிய கடை வைத்து நடத்தும் தம் தந்தைக்கு உதவியாக இருக்கப்போவதாக இவர் கூறினார். இவரது குடும்பம் பொற்கோவிலுக்கு அருகே வசித்து வருகிறது.