புதிய கொவிட்-19 தடுப்பூசி சிங்கப்பூரில் கிடைக்கக்கூடும். அமெரிக்க நிறுவனமான நொவாவேக்ஸ், சுகாதார அறிவியல் ஆணையத்தின் இடைக்கால அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது.
இதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் உறுதிப்படுத்திய ஆணையம், நொவாவேக்ஸ் தனது விண்ணப்பத்தை இம்மாதம் 22ஆம் தேதி அன்று தொற்றுநோய் சிறப்பு அணுகல் பாதை வழியாக தரவைச் சமர்ப்பித்ததாகவும் கூறியது.
"சிங்கப்பூரில் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன், தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு மற்றும் இடைக்கால அங்கீகாரத்திற்கான செயல்திறன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்
படுத்த, சுகாதார அறிவியல் ஆணையம் அதன் தரவை கவனமாகவும் முழுமையாகவும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது" என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சமர்ப்பித்த தரவின் முழுமை மற்றும் ஒழுங்குமுறை மதிப்பீட்டின் போது வெளிப்படும் ஆணையத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க நிறுவனம் எடுக்கும் நேரத்தைப் பொறுத்து, மதிப்பாய்வுக்கான நேரம் பல வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க உயிர் தொழில்நுட்ப நிறுவனத்தின்படி, மூன்று சோதனைகளின் இரண்டு கட்டங்களிலிருந்து தொகுக்கப்பட்ட மருத்துவச் சோதனை தரவு, 'எம்ஆர்என்ஏ' (mRNA) அல்லாத தடுப்பூசி பல்வேறு கிருமி மாறுபாடுகளில் சுமார் 90 விழுக்காடு செயல்திறன் வீதத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
தடுப்பூசி, 21 நாட்கள் இடைவெளியில், இரண்டு 0.5 மில்லி லிட்டர் அளவுகளில் கொடுக்கப்படுகிறது.
அமெரிக்காவிலும் மெக்சிகோவிலும் தடுப்பூசிக்கான 30,000 பங்கேற்பாளர்களிடையே நடத்தப்பட்ட சோதனைகளில் மிதமான மற்றும் கடுமையான நோய்களுக்கு எதிராக 100 விழுக்காடு பாதுகாப்பையும் 90.4 விழுக்காடு செயல்திறன் விகிதத்தையும் நிரூபித்துள்ளன.
நொவாவேக்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஒழுங்குமுறை அங்கீகாரம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஏதேனும் வெளியீட்டுத் தேவைகளை நிறைவு செய்தவுடன் அதன் தடுப்பூசி அளவுகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.
சிங்கப்பூர் இந்த ஆண்டு ஜனவரியில் தனது தடுப்பூசியை விநியோகிப்பதற்காக நிறுவனத்துடன் முன்கூட்டியே கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான, பயனுள்ள நல்ல தரமான தடுப்பூசிகளை சுகாதார அமைச்சு தேடி வருவதாக ஜூன் மாதம் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருந்தார்.
நொவாவேக்ஸ் ஒரு புரத அடிப்படையிலான தடுப்பூசி என்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு 'சார்ஸ்-கோவி-2 ஸ்பைக்' புரதத்தின் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட பதிப்பைப் பயன் படுத்துகிறது.
சார்ஸ்-கோவி-2 என்பது கொவிட்-19-ஐ ஏற்படுத்தும் கிருமி ஆகும்.
நொவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டால் அது ஃபைசர்-பயோஎன்டெக் கமிர்னட்டி, மொடர்னா, சினோவேக், சினோ ஃபார்ம் ஆகிய தடுப்பூசிகளுக்கு அடுத்து இங்கு கிடைக்கும் ஐந்தாவது தடுப்பூசியாக இருக்கும்.
உற்பத்தியாளர் பயன்பாட்டிற்கான இடைக்கால ஒப்புதலுக்கு விண்ணப்பிக்காததால், தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சினோஃபார்ம் சேர்க்கப்படவில்லை.
தடுப்பூசியை பூஸ்டர் எனும் மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்
படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டதற்கு, "இன்றுவரை நிறுவனத்தின் தடுப்பூசி முதல் இரண்டு தவணைகளாகப் போடப்படுவதற்குத்தான் பயன்
படுத்தப்பட வேண்டும் என்ற தரவைத் தாக்கல் செய்திருக்கிறோம்," என்று நொவாவேக்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"எங்கள் பூஸ்டர் தடுப்பூசி ஆய்வுகள் முடிந்ததைத் தொடர்ந்து கூடுதல் அங்கீகாரங்களுக்கு விண்ணப்பிக்கத் தயாராக இருக்கிறோம்," என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசியாகப் பயன்படுத்த ஒப்புதல் கோரிக்கை