டிபிஎஸ் வங்கியின் இணையத் தளம், செயலி ஆகியவற்றில் வங்கிச் சேவைகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக ஏற்பட்ட இடையூறால் தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று சிங்கப்பூரில் உள்ள வர்த்தகங்கள் கூறின.
கடந்த 23ஆம் தேதி காலை சேவைத் தடங்கல் தொடங்கியது.
டிபிஎஸ் வங்கி, பிஓஎஸ்பி வங்கி வாடிக்கையாளர்களால் வங்கிகளின் இணையத்தளம், செயலி ஆகியவற்றைப் பயன்படுத்த அவற்றுள் நுழையமுடியாமல் போனது.
நேற்று முன்தினமும் சிலரால் வங்கிகளின் மின்னிலக்கச் சேவை களைப் பயன்படுத்த முடியவில்லை.
நேற்று காலை பெரும்பாலான வாடிக்கையாளர்களால் வங்கியின் மின்னிலக்கத் தளங்களுக்குள் நுழைய முடிந்தது. ஆனால் தங்களால் சேவைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய முடியவில்லை என்று சிலர் புகார் அளித்தனர்.
தமிழ் முரசால் நேற்று பிற்பகலில் டிபிஎஸ் வங்கியின் செயலிவழி அதன் சேவைகளைப் பயன் படுத்த முடிந்தது.
இவ்வேளையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பல நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கு குறைவான இடையூறே ஏற்பட்டதாகக் கூறின.
கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், "தற்போது நடப்பில் உள்ள ஜைரோ நடைமுறைகளுக்கு பாதிப்பில்லை.அதேபோல வங்கிக்கணக்கு அல்லது 'பேநவ்' வழி கட்டணம் செலுத்துதல், காப்புறுதித் தொகையை சந்தாதாரருக்கு வழங்குதல் போன்ற சேவைகளுக்கும் பாதிப்பு இல்லை," என்று கூறினார்.
ஒரேயொரு வாடிக்கையாளர் மட்டும் இதுகுறித்து தங்களிடம் உதவி நாடியிருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் கூறினார்.
வாடிக்கையாளர்கள் காப்புறுதிச் சந்தாவைச் செலுத்த பல்வேறு வழிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தேவைப்பட்டால் கால அவகாசம் வழங்கவும் தங்களிடம் ஏற்பாடுகள் உண்டு என்றும் புருடென்ஷியல் காப்புறுதி நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரிவுத் தலைவர் லீ சுய் லின் தெரிவித்தார்.
தங்கள் நிறுவனம் சில கட்டணங்களைச் செலுத்த காசோலையைப் பயன்படுத்துவதாலும் வேறு வங்கிகளின் சேவைகளையும் நாடுவதாலும் அதிக பாதிப்பு இல்லை என்று ஜேஆர்டபுள்யூ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோய் கீ கூறினார்.
ஆனால் அண்மையில் வங்கி களின் மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் தமக்கு, அவற்றின் மீதான நம்பிக்கை சற்று ஆட்டங்கண்டிருப்பதாக திரு கீ சொன்னார்.
இந்தச் சேவைத் தடங்கலால் டிபிஎஸ் வங்கியின் பெயருக்கு சற்று களங்கம் ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று இங்குள்ள நிதித்துறை நிபுணர்கள் சிலர் கூறினர்.
டிபிஎஸ் வங்கியின் உலகளாவிய நற்பெயருக்கு பெரிய பாதிப்பில்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளித் தலைவர் முனைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறினார்.