கடந்த 2015ஆம் ஆண்டு கணினிப் பொறியியல் துறையில் டிப்ளோமா பட்டப்படிப்பை முகம்மது ஆதம் முகம்மது லீ தொடங்க இருந்தார். அந்நேரத்தில் ஹவ்காங் விளையாட்டரங்கத்துக்கு வெளியே நடைபாதையில் ஏறிச் சென்ற வாகனம் ஒன்று அவர்மீது மோதியது.
விபத்தின் காரணமாக, திரு ஆதமுக்கு பல்வேறு கடுமையான நிரந்தர காயங்கள் ஏற்பட்டன. அவரது மனநலம் குன்றியது. திரு ஆதமுக்கு தற்போது 30 வயது ஆகிறது. அவர் கடந்த 2017ஆம் ஆண்டிலும் 2020ஆம் ஆண்டிலும் படிப்பை மீண்டும் தொடங்க முயன்றார். ஆனால் அதைச் சமாளிக்க முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார்.
காரை ஓட்டிய ஷோன் டே ஜியா ரொங்குக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் திரு ஆதமுக்கு $2 மில்லியனுக்கு மேற்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
திரு ஆதமின் சார்பில் அவரது தாயாரும் அக்காவும் அந்த வழக்கைத் தொடுத்திருந்தனர்.
திரு டேயின் காப்புறுதி நிறுவனங்கள் அந்த விபத்துக்கு 100% பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் இழப்பீடு கோரப்பட்ட பல்வேறு பிரிவுகளை அவர்கள் எதிர்த்து வாதிட்டனர்.
திரு ஆதம் வருங்காலத்தில் ஈட்டியிருக்கக்கூடிய வருவாய்க்கு ஈடாக ஒரு மில்லியன் வெள்ளி, அவரது மூளையில் ஏற்பட்ட கடும் காயத்துக்கு $216,000, முழுநேர இல்லப் பணியாளரை வேலைக்கு அமர்த்த $370,800, திருமண வாய்ப்பை இழந்ததால் $10,000 என பல்வேறு பிரிவுகளில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
மேலும், மருத்துவச் செலவு களுக்கு $237,448.03, பராமரிப்பாளருக்காக $21,739.84, டிப்ளோமா பட்டப்படிப்பை இழந்ததற்காக $1,219.55 எனும் பிரிவுகளில் சிறப்பு இழப்பீட்டுத் தொகையை வழங்கி நீதிபதி எஸ்.மோகன் தீர்ப் பளித்தார்.