கொழுந்துவிட்டு விட்டு எரிந்துகொண்டிருந்த காரிலிருந்து தமது காதலரைக் காப்பாற்ற முயற்சி செய்தபோது கடும் தீக்காயங்களுக்கு ஆளான குமாரி ரேபி ஓ சியூ ஹுவே கடந்த ஜூன் மாதத்தில் மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி தஞ்சோங் பகார் வட்டாரத்தில் உள்ள ஒரு கடைவீட்டில் மோதிய காரில் 26 வயது குமாரி ஓவும் இருந்தார்.
காரில் மாட்டிக்கொண்ட தமது 29 வயது காதலர் ஜொனத்தன் லோங்கையும் அவரது நான்கு நண்பர் களையும் காப்பாற்றச் சென்ற குமாரி ஓவுக்கு உடலில் சுமார் 80 விழுக்காட்டுத் தீக்காயங்கள் ஏற்பட்டன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்வி களுக்கு பதில் அளித்த சிங்கப்பூர் பொது மருத்துவமனை குமாரி ஓ கடந்த ஜூனில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என்று உறுதிசெய்தது.
குமாரி ஓ, அவ்வப்போது தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். நண்பர்கள் சிலரை அவர் சமூக ஊடகம்வழி தொடர்பு கொண்டதாக ஷின் மின் சீன நாளிதழ் நேற்று முன்தினம் கூறியது. அவர் நம்பிக்கையுடன் இருந்தபோதும், நலம்பெற தனிமையும் அவகாசமும் அவருக்குத் தேவை என்று குமாரி ஓவின் நண்பர்கள் ஷின் மின்னிடம் கூறினர். கார்விபத்தில் திரு லோங்கும் அவரது நான்கு நண்பர்களும் உயிரிழந்தனர். கடுமையான காயங்கள் ஏற்பட்ட குமாரி ஓ, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஒரு வாரத்தில் அவரது உடல்நிலை சீராகி அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவிலிருந்து உயர் கவனிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
குமாரி ஓ, விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றியவர். சீன கெத்தாய் பாடகராகவும் இருந்தவர். மறைந்த திரு ஜொனத்தன் லோங்கும் அவரும் திருமணம் செய்வதாக இருந்தது.
குமாரி ஓவுக்கு தற்போது மறுவாழ்வு சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை, தோல் மாற்று சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது தந்தை ஷின் மின்னிடம் தெரிவித்தார்.