பொதுக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்து மகிழ்ச்சி அடைவோம்

காலையில் தினமும் எழுந்து உணவங்காடி நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள சைக்கிள் ஓட்டிச் செல்லும் திரு வை.சுப்ரமணியம், இன்றைய பொழுது எப்படி போகும் என்று நினைத்துக்கொண்டே போவார்.

ஒவ்வொரு நாளும் அவரது அனுபவங்கள் மாறுபட்டவையாக அவருக்கு இருந்து வருகின்றன.

“ஒருநாள் நல்ல அனுபவங்கள். பெரும்பாலும் அப்படிதான். ஆனால் சில நாட்கள் எனக்கு க‌ஷ்டமாக இருக்கும்,” என்றார் சுப்ரமணியம்.

பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியைக் கடந்த ஏழு ஆண்டுகளாகச் செய்துவரும் அவர், சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு மக்களிடம் அதிகரித்துள்ளதாக நம்புகிறார்.

பெரும்பாலானோர் கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு முடிந்தவரை சுத்தமாக இருப்பதை உறுதிச் செய்து செல்கின்றனர்.

ஆனால் இன்னும் பொறுப்பில்லாதவர்கள் அவ்வப்போது உள்ளதை அவர் குறிப்பிட்டார்.

“அப்படிப்பட்ட சூழலில் அவர்களிடம் நான் பக்குவமாக எடுத்துக்கூறுவேன். ஆனால் இது உன் வேலை தானே ஏன் என்னை செய்யச் சொல்கிறாய் என்று என்னிடம் கூறியவர்களும் உள்ளனர். இருப்பினும் நான் தொடர்ந்து நல்ல பழக்கவழக்கங்களை எடுத்துரைத்தபடியே இயங்கிக் கொண்டிருக்கிறேன்,” என்று புன்சிரிப்புடன் கூறினார்.

“கைக் கழுவியபின் தண்ணீரை தரையில் அதிகளவில் தெரிக்கும்படி செய்வது, குப்பைகளை ஆங்காங்கே வீசுவது, பயன்படுத்தியபின் விசைநீரை அழுத்தாமல் செல்வது என பல வகையில் சுத்தமில்லா பழக்கங்கள் கொண்டிருப்பவர்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்றாலும் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளது,” என்றார் அவர்.

உணவங்காடி நிலையத்திற்கு வாடிக்கையாக வருவோர் திரு சுப்ரமணியத்தின் செயல்பாடுகளை அறிந்துள்ளனர். பொறுப்புமிக்க அவரது பணியை சேவையாகவும் அவர் செய்வதாகக் கூறினார் திரு உத்ராபதி.

தினந்தோறும் காலையில் தேநீர் அருந்துவதோடு நண்பர்களோடு உறவாட அங்கு வரும் வழக்கமுடைய அவர், பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தும்போது சுத்தமாக இருப்பது மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவதாகக் கூறினார்.

“சுப்ரா சுத்தமாக வைத்துள்ளார். ஆனால் அதைவிட பயன்படுத்தும் மக்களும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பேன். பொதுக் கழிப்பறை என்பது அனைவரும் பொதுவாகப் பயன்படுத்துவது என்று மட்டும் அர்த்தமல்ல. அனைவரும் பொதுவாகச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்,” என்றார் ஓய்வுபெற்ற கணக்காளரான அவர்.

பொதுக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருப்பது அனைவரின் பொறுப்பாகும் என்பது சுப்ரமணியத்தின் கருத்து மட்டுமல்ல. அனைவரும் ஏற்று செயல்படுத்தவேண்டிய கூற்று.

அத்தகைய முயற்சிக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே நோய்ப் பரவலைத் தடுக்க நாம் எடுக்கும் பல முயற்சிகளில் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும்.

நம் வீட்டில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருக்க நாம் எந்த அளவிற்கு விரும்புகிறோமோ அதைப் போலவே பொதுக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருக்க முனைவோம்.

நல்ல கழிப்பறைச் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமானது. அது ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பதோடு நம் நண்பர்கள், அணுக்கமானோருக்கும் அதை எடுத்துரைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயல்பட்டால் அனைவருக்குமே நன்மை பயக்கும்.

அசுத்தமான இடங்கள் நோய்ப் பரவலை முடுக்கிவிடும். அனைவரின் நலனுக்காக நாம் சுத்தத்தை முன்னிலைப்படுத்தி கவனத்துடன் செயல்படுவோம்.

சுத்தத்திற்கு நான்கு செயல்கள்

பொதுக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருப்பது எளிதான ஒன்று. நான்கு சாதாரண வழிகளில் நாம் நம் பங்கை ஆற்ற முடியும்.

முதலாவது நாம் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின்னர் விசை நீரை முழுமையாக அழுத்தி சுத்தம் செய்வது. அவ்வாறு முழுமையாக அழுத்துவதால் நாம் நம் கழிவுகளை முற்றிலும் நீக்கிவிடுவோம். அதை நாம் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

அடுத்ததாக கழிப்பறை இருக்கையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நாம் பயன்படுத்திய பின்னர் அடுத்ததாக வருபவர் பயன்படுத்த ஏதுவாக நாம் அமர்ந்த இருக்கையைச் சுத்தம் செய்துவிட்டு வெளியேறவேண்டும். நாம் பயன்படுத்த வரும்போது நமக்கு எப்படி சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைத்தோமோ அந்த வகையில் அடுத்தவருக்கும் அப்படி விட்டுச் செல்வதே சிறந்தது.

மூன்றாவதாக குப்பைகளை முறையாக குப்பைத் தொட்டியில் போடவேண்டும். நாம் பயன்படுத்தும் ‘டி‌ஷூ’ தாள்களையோ இதர குப்பைகளையோ பொறுப்பில்லாமல் ஆங்காங்கே விட்டுச் செல்லக்கூடாது. அவற்றை குப்பைத் தொட்டியில் சரிவர போடவேண்டும். நாம் கழிப்பறைகளுக்குள் செல்லும்போது குப்பைகள் ஆங்காங்கே கிடந்தால் நல்ல அனுபவமாக இருக்காதுதானே. அதனால் மற்றவர்களுக்கும் நல்ல வகையில் கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் செல்வோம்.

இறுதியாக, கழிப்பறையின் தரையை உலர்வாக வைத்திருப்போம். கைகளைக் கழுவியப் பின்னரும் சரி இதர சூழல்களிலும் தண்ணீரைப் பயன்படுத்திய பின்னர் தரையை ஈரமாக்காமல் இருக்க முயற்சிப்போம். கழிப்பறையின் தரைகளில் தண்ணீர் தொடர்ச்சியாக இருந்துக்கொண்டே இருந்தால் நோய் பரவுவதற்கு ஏதுவாக சூழல் அமைந்துவிடும். ஆகவே, அனைவரின் நலனுக்காகவும் தரையை உலர்வாக வைத்திருப்பதை நாம் கடமையாக ஏற்று நிலை நாட்டுவோம்.

தரையை உலர்வாக வைத்திருப்பதால் வழுக்கி விழுவதைத் தவிர்க்கலாம். குறிப்பாக முதியோர் கழிப்பறையைப் பயன்படுத்த வரும்போது தரை உலர்வாக இருந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். தண்ணீர் சிந்திக் கிடந்தால் வழுக்கிவிடும் அபாயம் அதிகம்.

பொது கழிப்பறைகளைப் பாதுகாப்பான இடமாகவும் சுத்தமான இடமாகவும் சுகாதாரமான இடமாகவும் நாம் வைத்திருக்கு இந்த நான்கு அடிப்படை பழக்கங்களைப் பின்பற்றினால் போதும். எளிதாகப் பேணக் கூடிய இத்தகைய நடவடிக்கைகளை நாமும் செய்வோம்; அனைவருக்கும் எடுத்துரைப்போம்.

சுத்தத்திற்குப் பெயர் பெற்ற நாடு சிங்கப்பூர். அந்தப் பெயரைத் தொடர்ந்து நிலைநாட்ட, அந்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி விளங்க நாம் அனைவரும் நம் பங்கை ஆற்றுவோம். நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயனாக விளங்கும் அதே சமயம் தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் சுகாதாரமான சூழலுக்கும் சுத்தமான வாழ்க்கைமுறைக்கும் ஆதரவாக இந்தச் செயல்கள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் நம் பங்கை ஆற்றுவோம். பொதுக் கழிப்பறைகளை நம் வீட்டுக் கழிப்பறைகள் போன்றே சுத்தத்துடன் வைத்திருப்போம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!