65 வயதிலும் துடிப்புடன் சேவையாற்றும் கணேசன்

தேசிய காற்பந்து விளையாட்டாளராக, விமானியாக, இளையர்களுக்கு வழிகாட்டியாக, திரு வெள்ளசாமி கணேசன் பல்வேறு துறைகளில் காலூன்றி தடம் பதித்துள்ளார்.

1970களில் ‘லயன்ஸ்’ சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியில் விளையாட்டாளராக இணைந்த இவர், ப்ரீ ஒலிம்பிக்‌ஸ் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். குறிப்பாக, 1977ல் நடந்த மலேசியா கப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியிட்ட விளையாட்டு வீரர்களில் திரு கணேசனும் ஒருவர். 12 ஆண்டுகளில் முதல் முறையாக சிங்கப்பூர் அணி மலேசியா கப் போட்டியில் வெல்வதற்குக் காரணமாக அமைந்து, சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தார் திரு கணேசன்.

ஒரு சிங்கப்பூரராக அப்போட்டி யில் விளையாடி வெற்றிப்பெற்றது தனக்குக் கிடைத்தப் பெரிய அங்கீகாரமாகக் கருதினார் அவர். அவ்வெற்றியின் மூலம் சிங்கப்பூரர்களுக்கும், சிங்கப்பூரில் வாழும் தமிழர்களுக்கும், பெருமையும் மகிழ்ச்சியும் சேர்த்ததையும், தன்னால் முடிந்த அளவில் இளமையிலேயே நாட்டிற்குப் பங்காற்ற முடிந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

“மக்கள் என்னை அடையாளம் கண்டு என்னை வாழ்த்தத் தானாகவே முன்வந்தனர். அந்நினைவுகள் மிக இன்பமானவை. ஆனால், அதனைவிட எனக்கு அதிக மகிழ்ச்சி அளித்தது, சாதாரணப் பின்னணியிலிருந்து வந்த என் பெற்றோருக்கு நான் பெருமை சேர்த்து தான். என்னை வாழ்த்த வந்தோர், என் பெற்றோரையும் பாராட்டிச் சென்றனர். குறுகிய காலக்கட்டத்தில் ஓர் இளையராக சிங்கப்பூரின் விளையாட்டுத் துறையில் நான் உயர்ந்ததைப் பலரும் பாராட்டி ஆதரவளித்ததையும் என்னால் மறக்க இயலாது.” என்று திரு கணேசன் கூறினார்.

விளையாட்டுத் துறையில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குத் திறம்பட பணியாற்றியப்பின், 1984ஆம் ஆண்டில் அவர் குடும்ப நலன் கருதி அத்துறையிலிருந்து விலக வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. எட்டுப் பேர் கொண்ட தனது குடும்பத்துக்கு வருமானம் ஈட்டவேண்டிய நிலையில் அவர் இருந்தார். அம்முடிவு ஒரு முற்றுப்புள்ளியாக இல்லாமல் ஒரு புதிய ஆரம்பத்துக்கு இட்டுச்சென்றது. விமானப் பொறியியல் நிபுணராகப் பணியாற்றிய அவரது அனுபவத்தின் தொடர்ச்சியாக 1985ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்தில் பயிற்சி மேற்கொண்டதன் பின்னர், அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக இணைந்தார். அவரது 43 ஆண்டு சேவைக்குப் பின், தற்போது 65 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

“ஓய்வு பெறவேண்டிய கட்டாயம் இல்லையெனில், நான் இன்னமும் விமானம் ஓட்டிக்கொண்டுதான் இருக்க ஆசை. இருப்பினும், என்னால் முடிந்த வகைகளில் இன்னும் இத்துறைக்குப் பங்காற்ற முயன்று வருகிறேன். என்னோடு இத்துறையில் பயணித்தச் சக ஊழியர்களும், என்னோடு கலந்துரையாடி மகிழும் இளைய விமானிகளும், என்னோடு செலவிடும் நேரத்தில் உத்வேகம் அடைகின்றனர் என்பது எனக்கு நிறைவைத் தருகின்றது. என்னிடம் இருந்து ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக அவர்கள் சொல்வதுண்டு. அத்தகைய கருத்துக்கள் என்னை மேன்மேலும் பங்காற்ற ஊக்குவிக்கின்றன.” என்றார் திரு கணேசன்.

பணியிலிருந்து மட்டுமே ஓய்வுப் பெற்றுள்ள திரு கணேசன், தனது வாழ்வில் மேன்மேலும் துடிப்புடன் இயங்கி வருகின்றார். அறிவுரை கேட்க முன்வரும் இளைய விமானிகளுக்கு, குழு உரையாடல்கள் மூலமும், மாதாந்திர சந்திப்புகள் மூலமும், அவர் தொடர்ந்து வழிகாட்டி வருகின்றார். தனது கடந்த கால அனுபவங்களை வருங்கால தலைமுறையினரிடம் பகிர்ந்துகொண்டு, சிறந்த விமானிகளாய் அவர்களை வளர்த்தெடுக்கும் பணியில் திரு கணேசனுக்குப் பங்குண்டு. தனது நீண்ட பயணத்தில் தான் கண்டவற்றையும் உணர்ந்தவற்றையும் பிறரோடு பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதை மிகப் பெரிய நட்டமாகக் கருதுகின்றார் அவர். எனவே, இளைய விமானிகளுக்கு இத்துறை சார்ந்த விழிப்புணர்வையும் இப்பணிக்குத் தேவையான பண்புகளையும் ஊட்டுவதற்கு அவர் முக்கியத்துவம் அளித்து வருகின்றார். ஒரு துறையில் சிறந்த விளங்குவதால் மட்டுமே ஒருவர் நல்ல ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் திகழ முடியாது என்று நம்பும் திரு கணேசன், நல்ல முறையில் பயிற்றுவிப்பதற்கானத் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள விருப்பப்படுவதாகவும் சொன்னார்.

கடந்த ஆண்டிலிருந்து தரவு உள்ளீடு பணியில் சேர்ந்து, தனது தனிப்பட்டத் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார் திரு கணேசன். மேலும், தனது 90 வயது மருத்துவ நண்பரின் மருந்தகத்துத் தினமும் சென்று அவருக்கு உதவியாக இருந்து வருகின்றார் அவர். இவ்வகையில், அவரது குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், தனக்கும் நேரம் ஒதுக்கிக்கொண்டு, தன்னால் முடிந்த அளவில் தொடர்ந்து பங்காற்றுகிறார்.

இவ்வாறு திட்டமிட்டுக்கொண்டு, ஆரோக்கியமானதொரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட திரு கணேசன், சிறந்த வாழ்வியல் நிர்வாகமே நம்மை சமூகத்துக்குப் பயன்படும் வகையில் பங்களிக்க உதவும் என்றார். சமூகத்துக்குப் பணியாற்றும் கடமையும் இளமையும் தனக்கு இன்னும் இருப்பதாக உணர்கின்றார் திரு கணேசன். மேலும், நாம் சமூகத்தில் நற்பாங்காற்றுகிறோம் என்ற உணர்வுதான் நம்மை மிக இளமையாக வைத்திருக்கும் என்று அவர் கூறினார். எப்பணியில் சேர்ந்தாலும், அதில் நமக்குக் கிட்டும் ஊதியத்தைவிட அதில் நாம் ஆற்றக்கூடிய பங்கையும் அதிலிருந்து கிடைக்கும் அனுபவத்தையுமே நாம் முதன்மையாகக் கருதி செயல்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெற்றிகரமாக மூப்படைவதற்கான செயல்திட்டம்

உறுதியுடனும் கண்ணியத்துடனும் சிங்கப்பூரர்கள் மூப்படைவதற்கான வழிகளை ஆராயும் நோக்கில் 2015ஆம் ஆண்டில் மூப்படைதல் விவகாரங்களுக்கான அமைச்சர்நிலைக் குழு இச்செயல்திட்டத்தைத் தொடங்கியது.

அக்குழு 2017ஆம் ஆண்டில் “இளமை உணர்வில் நான் எஸ்ஜி” எனும் திட்டத்தைத் தொடங்கி, செயல்திட்டத்தையும் துடிப்பான மூப்படைதலையும் ஊக்குவிக்க முனைந்தது.
மேல் விவரங்களுக்கு http://www.ifeelyoung.sg/ இணையப்பக்கத்தை நாடலாம்.

தற்கால, எதிர்கால மூத்தோருக்கு சேவையாற்ற, மேலும் பலதரப்பட்ட தேவைகளுக்கு உடனடியாக உதவவும் கொவிட்-19 சூழலால் புதிய செயல்பாட்டு சூழலையும் கற்றலையும் கொண்டு புதுப்பிக்கப்பட்டச் செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.புதுப்பிக்கப்பட்ட செயல் திட்டமானது, பராமரிப்பு, பங்களிப்பு, இணைப்பு ஆகிய மூன்று கூறுகளை மையப்படுத்துவதாக அமைகிறது.

பராமரிப்பு எனும் கூறு, நடைப்பிணிகளைத் தவிர்க்கவும், மூத்தோரின் வாழ்வு நலனை மேம்படுத்தவும், பராமரிப்பு சேவைகள் மூலம் தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணி வாழவும் ஊக்குவிக்கும்.

பங்களிப்பு எனும் கூறு, மூத்தோருக்கான வேலை வாய்ப்புகளையும், கற்றல் அனுபவங்களையும், தொண்டூழியப் பணி ஈடுபாட்டையும் அதிகரிக்க முற்படும்.
கடைசியாக, இணைப்பு எனும் கூறு, “கம்பத்து உணர்வு” போன்ற மூத்தோருடைய சமூகப் பிணைப்பையும், இளையத் தலைமுறையினருடனான உறவுகளையும் மின்னிலக்கத் தளங்களில் வலுப்படுத்துவதோடு அரவணைப்புடன் கட்டப்பட்ட சூழலில் மூப்படைவதற்கு ஆதரவளிக்கும்.

இந்தத் தகவலை உங்களுக்கு வழங்குவது:

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!