சமூக நலனில் அக்கறை காட்டும் தொண்டூழியர் ககன்

தொண்டூழியப் பணி ஆற்றிவரும் 68 வயதான திரு வெள்ளப்பக்குட்டி ககன், விளையாட்டுத் துறையிலும் தான் வசிக்கும் செம்பவாங் தொகுதியிலும், பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

திரு ககன் 2015ஆம் ஆண்டு முதல் டீம் நிலாவில் தொண்டூழியராக இயங்கி வருகின்றார். உள்ளூர், வெளியூர் விளையாட்டு போட்டிகளில் தொண்டூழியப் பணிகள் செய்வதோடு, 2016ஆம் ஆண்டு முதல் சக்கரநாற்காலி ரக்பி அணியிற்காகத் தொண்டூழியப் பணியாற்றத் தொடங்கினார். சிங்கப்பூர் சக்கரநாற்காலி ரக்பி அணியுடன் ஜகார்த்தாவுக்குப் பயணம் செய்த அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட திரு ககன், அந்த அனுபவம் தன் மனதை உருக்கிய ஒன்றாகும் என்றும், அதன் தாக்கத்தினால்தான் மேன்மேலும் தொண்டூழியம் ஆற்றவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது என்றும் சொன்னார்.

“92 வயதான என் தாயாரை நான் தனியாகப் பராமரித்து வருகிறேன். அதன் பின்னரே, சமூகத்தில் சவால்களை எதிர்நோக்குவோருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது. பின்னர், விளையாட்டுத் துறையில் தொண்டூழியராகச் சேவையாற்றிக்கொண்டிருந்தபோது, சிங்கப்பூரின் முதல் சக்கரநாற்காலி ரக்பி அணியுடன் தொண்டூழியராகப் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்த விளையாட்டாளர்களின் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, அவற்றைச் சமாளிக்கும் வகை அறிய நான் உழைத்தேன். அவர்களது மனோதிடத்தைப் பார்த்து நான் பலமுறை வியந்ததுண்டு. அத்தகைய உறுதியைக் கண்டு நானும் பெரிய அளவில் உத்வேகம் அடைந்தேன். விளையாட்டாளர்களுடன் இவ்வகையில் உரையாடி நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன். நான் ஜகார்த்தாவில் கழித்த அந்த ஐந்தாறு தினங்கள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய நினைவுகளை எனக்குத் தந்திருக்கின்றன.” என்று நெகிழ்ந்தார் திரு ககன்.

சிங்கப்பூர் சக்கரநாற்காலி ரக்பி அணி உறுப்பினர்களை மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த விளையாட்டாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு திரு ககனுக்கு வாய்த்தது. தாம் சந்தித்த விளையாட்டாளர்கள் அனைவரையும் குடும்பமாகவே கருதி, இன்றும் அவர்களுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பில் இருக்கின்றார் திரு ககன்.

விளையாட்டு ஆர்வலராக இருக்கும் திரு ககன், விளையாட்டுத் துறையில் அதிகாரிகளாகத் திகழும் தனது நண்பர்களைப் போல் அல்லாமல், தொண்டூழியராக இருக்கவே விரும்பினார்.

புது தொண்டூழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் இளைய தொண்டூழியர்களுக்கு வழிகாட்டுவதிலும் உற்சாகமடைகின்றார் அவர். எந்தத் துறையில் தொண்டூழியம் புரிந்தாலும், அதை செவ்வனே தொடர்ந்து செய்வதே முக்கியம் என்று வலியுறுத்தினார் திரு ககன். மேலும், ஏனையப் பணிகளைவிட அதிக உறவுகளை அமைத்துத் தந்து, அன்பும் பரிவும் பொழிவதால், தொண்டூழியப் பணியையே விரும்புவதாக அவர் கூறினார்.

விளையாட்டில் மட்டுமின்றி தான் வசிக்கும் செம்பவாங் சென்ட்ரல் தொகுதியிலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 2020ல், செம்பவாங் குழுத்தொகுதி இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவராகப் பொறுப்பேற்று, பல சமூக நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்தினார் திரு ககன். மேலும், கடந்த ஆண்டில், கேன்பராவில் இயங்கும் ‘ப்ளோசம் சீட்ஸ்’ எனும் மூத்தோருக்கானப் பராமரிப்பு மையத்தில் தொண்டூழியப் பணி ஆற்றியுள்ளார் அவர். தடுப்பூசிப் போட்டுக்கொள்வதைப் பற்றிய விழிப்புணர்வை மூத்தோருக்கிடையே வளர்க்கும் நோக்கில், வீடு தேடி சென்று அவர்களை ஊக்குவிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம், சக குடியிருப்பாளர்களின் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தியதிலும், விலைமதிப்பில்லா உறவுகளையும் அனுபவங்களையும் சம்பாதித்ததிலும் மகிழ்ச்சி கொள்கிறார் அவர்.

“முதியோர்கள் தங்களின்மீது நம்பிக்கை கொண்டு, வீட்டிலிருந்து உலகத்துக்குள் மீண்டும் காலடி எடுத்து வைக்க வேண்டும். இது சிங்கப்பூர்வாழ் மக்களுக்கு மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள முதியோருக்கும் பொருந்தும். அவ்வாறு முதல் படியை எடுத்து வைக்கும் முதியோர்கள், பயத்தையும் தயக்கத்தையும் கைவிடுவது அவசியம். மேலும், புதிய பாதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் வடித்துக்கொள்வதிலும் முதியோர் சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.

தங்களுக்காகவும், தங்கள் சமூகத்துக்காகவும் நிறைவைத் தேடிக்கொள்ள முதியோர்கள் முயற்சி செய்தாலே, தொண்டூழிய ஆர்வம் அவர்களைப் பற்றிக்கொள்ளும்.” என்று கூறினார் திரு ககன்.

அவ்வாறு தொண்டூழியப் பணியில் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைத்த திரு ககன், இன்று வரையிலும் தன் பயணத்தை எண்ணி வருந்தியதில்லை என்று குறிப்பிட்டார்.

தான் எங்கு சென்றாலும், எந்தத் தொண்டூழியப் பணியில் ஈடுபட்டாலும், பிறரின் வாழ்வை எளிதாக்கவோ மேம்படுத்துவோ முயற்சி செய்து வருகிறார் திரு ககன். சமூக அக்கறை என்பது வயது வரம்புகளைத் தாண்டி அனைத்து மனிதருக்குள்ளும் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், தன்னை மேன்மேலும் இளமையாக உணரவைக்கும் தொண்டூழியப் பணியைத் தொடர திரு ககன் திட்டமிட்டுள்ளார். திரு ககன், பிறர் நலன் கருதி பணியாற்றுவதோடு, தனது ஆரோக்கியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, வீட்டிலும் சமூகத்திலும் துடிப்பாகச் செயல்பட்டு வருகின்றார். தினமும் ஐந்து கிலோமீட்டர் நடப்பது உட்பட பல உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டு, உடல் மற்றும் மன நலத்துடன் திகழ்கின்றார் அவர்.

வெற்றிகரமாக மூப்படைவதற்கான செயல்திட்டம்

உறுதியுடனும் கண்ணியத்துடனும் சிங்கப்பூரர்கள் மூப்படைவதற்கான வழிகளை ஆராயும் நோக்கில் 2015ஆம் ஆண்டில் மூப்படைதல் விவகாரங்களுக்கான அமைச்சர்நிலைக் குழு இச்செயல்திட்டத்தைத் தொடங்கியது.

அக்குழு 2017ஆம் ஆண்டில் “இளமை உணர்வில் நான் எஸ்ஜி” எனும் திட்டத்தைத் தொடங்கி, செயல்திட்டத்தையும் துடிப்பான மூப்படைதலையும் ஊக்குவிக்க முனைந்தது.
மேல் விவரங்களுக்கு http://www.ifeelyoung.sg/ இணையப்பக்கத்தை நாடலாம்.

தற்கால, எதிர்கால மூத்தோருக்கு சேவையாற்ற, மேலும் பலதரப்பட்ட தேவைகளுக்கு உடனடியாக உதவவும் கொவிட்-19 சூழலால் புதிய செயல்பாட்டு சூழலையும் கற்றலையும் கொண்டு புதுப்பிக்கப்பட்ட செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.புதுப்பிக்கப்பட்ட செயல் திட்டமானது, பராமரிப்பு, பங்களிப்பு, இணைப்பு ஆகிய மூன்று கூறுகளை மையப்படுத்துவதாக அமைகிறது.

பராமரிப்பு எனும் கூறு, நடைப்பிணிகளைத் தவிர்க்கவும், மூத்தோரின் வாழ்வு நலனை மேம்படுத்தவும், பராமரிப்பு சேவைகள் மூலம் தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணி வாழவும் ஊக்குவிக்கும்.

பங்களிப்பு எனும் கூறு, மூத்தோருக்கான வேலை வாய்ப்புகளையும், கற்றல் அனுபவங்களையும், தொண்டூழியப் பணி ஈடுபாட்டையும் அதிகரிக்க முற்படும்.

கடைசியாக, இணைப்பு எனும் கூறு, ‘கம்பத்து உணர்வு’ போன்ற மூத்தோருடைய சமூகப் பிணைப்பையும், இளையத் தலைமுறையினருடனான உறவுகளையும் மின்னிலக்கத் தளங்களில் வலுப்படுத்துவதோடு அரவணைப்புடன் கட்டப்பட்ட சூழலில் மூப்படைவதற்கு ஆதரவளிக்கும்.

இந்தத் தகவல்களை வழங்குவது:

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!