நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் மிதிவண்டி ஓட்டச் சென்றுவிடுவார் 19 வயது பிரமிள் ரோஷன்.
“சைக்கிள் ஓட்டுவதால் இயற்கையின் அழகை ரசிக்க முடிவதுடன் சுத்தமான காற்றைச் சுவாசிக்கலாம். உடலுக்கும் சிறந்த பயிற்சி கிடைக்கிறது,” என்றார் ரோஷன். வாரத்திற்குக் குறைந்தது ஒருமுறையாவது மிதிவண்டிப் பயணத்தில் செல்வதாக அவர் குறிப்பிட்டார். மெக்ரிட்சி நீர்த்தேக்கப் பூங்கா, மண்டாய் மிதிவண்டி ஓட்டும் பாதை போன்றவற்றை இவர் அதிகம் நாடுவார்.
மிதிவண்டி ஓட்டும்போது உடலின் அனைத்து தசைகளுக்கும் பயிற்சி கிடைக்கிறது. மனவுளைச்சலைச் சமாளிக்கவும் இருதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கவும் மிதிவண்டி ஓட்டுதல் உதவுகிறது.
உடல் கொழுப்பைக் குறைக்க மிதிவண்டி ஓட்டுதல் போன்ற ‘கார்டியோ’ வகை உடற்பயிற்சிகளை ரோஷன் அதிகமாக மேற்கொள்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து தொடர்ந்து மிதிவண்டி ஓட்டி வரும் இவர், நான்கு மாதங்களில் பத்து கிலோ எடை குறைந்துள்ளதாக பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.