சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் பாதையில் செல்ல தேர்வாகியுள்ள அமைச்சர் லாரன்ஸ் வோங்கைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய எட்டு தகவல்கள்:
மரின் பரேட் பையன்
மரின் பரேட் வீடமைப்புப் பேட்டையில் ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தவர் திரு வோங். தமது 86 வயதில் கடந்த ஆண்டு காலமான அவரது தந்தை சீனாவின் ஹானான் தீவில் பிறந்து, இளம் வயதில் மலேசியாவில் ஈப்போவுக்குக் குடிபெயர்ந்தார். உயர்நிலைக் கல்வி முடித்தவுடன் சிங்கப்பூருக்கு வந்த திரு வோங்கின் தந்தை சைம் டார்பி நிறுவனத்தில் சேர்ந்தார். இங்கு அவர் திரு வோங்கின் தாயாரை மணந்தார். அவருக்கு இப்போது 82 வயதாகிறது. சிறுசிறு வேலைகளைச் செய்த திரு வோங்கின் தாயார் பின்னர் ஆசிரியராகி 40 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார். திரு வோங்குக்கு தம்மைவிட இரண்டு வயது அதிகமான மூத்த சகோதரர் ஒருவர் உள்ளார். அவர் தற்போது டிஎஸ்ஓ ஆய்வுக்கூடத்தில் விமானத்துறைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.
அக்கம்பக்கப் பள்ளியில் படிப்பு
திரு வோங், மசெக அறநிறுவன மரின் பரேட் பாலர்பள்ளியில் படித்து, பின்னர் தம் தாயார் பணியாற்றிய ஹேக் ஆண்கள் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியில் விளையாட்டைவிட புத்தகங்களிலேயே திரு வோங் அதிகம் ஆர்வம் காட்டினார். ஹேக் ஆண்கள் பள்ளியிலிருந்து அவர் தஞ்சோங் காத்தோங் தொழில்நுட்பப் பள்ளிக்குச் சென்றார். பின்னர் விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு அமெரிக்காவில் படிக்க அரசாங்க உபகாரச் சம்பளம் கிடைத்தது. அங்கு விஸ்கோன்சின்-மெடிசன் மற்றும் மிச்சிகன்-ஆன் அர்போர் பல்கலைக்கழகங்களில் முறையே பொருளியல் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
பிரதமரின் தலைமை
அந்தரங்கச் செயலாளர்
படிப்பு முடித்து சிங்கப்பூர் திரும்பிய திரு வோங், வர்த்தக தொழில் அமைச்சில் சேர்ந்தார். பின்னர் சுகாதார, நிதி அமைச்சுகளில் உள்ள பிரவுகளில் இயக்குநராகப் பணியாற்றினார். 2005ல் பிரதமர் லீ சியன் லூங்குக்குத் தலைமை அந்தரங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் கழித்து எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகியானார். அரசாங்க சேவையில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அவர் 2011 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறிப்பினர் ஆனார். அவர் தற்போது மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
கொள்கை வகுப்பாளர்
திரு வோங்குக்கு தனியார் துறையிலிருந்து பல வாய்ப்புகள் வந்தாலும் அவர் அரசாங்கப் பணி யில் இருக்கவே விரும்பினார். அந்தப் பணியில் அவர் சிங்கப்பூரர்களுக்கு உதவும் பல கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க உதவினார்.
கொவிட்-19 பணிக்குழு
2020ல் அப்போதைய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், கொவிட்-19ஐ எதிர்த்து போரிடும் ஒரு பணிக்குழுவை அமைக்க முடிவெடுத்தபோது, அவருக்குத் துணையாக இணைத் தலைவராக திரு வோங்கைத் தேர்வு செய்தார். அந்த முடிவை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அவரிடம் தெரிவித்தபோது, "மக்களைப் பாதுகாக்க என்னால் முடியும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் தயார்," என்று முன்வந்தார்.
பட்ஜெட் அறிக்கை தாக்கல்
கொவிட்-19 பணிக்குழுவின் இணைத் தலைவராக இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி தோன்றிய திரு வோங்குக்கு 2021 மே மாதம் நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. புதிய பொறுப்பில் திரு வோங், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமது முதலாவது வரவு செலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இசையும் நாய்களும்
புத்தகப் புழு, கிட்டார் இசைக் கருவி வாசிப்பவர், நாய்கள் பிரியர் என்று திரு வோங் தம்மை வர்ணிப்பார். அவருக்கு எட்டு வயது இருக்கும்போது தந்தை கொடுத்த கிட்டார் இசைக் கருவியை வாசித்து மகிழ்வார்.
பிரதான உரைகளை ஆற்றினார்
2020 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மசெகவின் தேர்தல் செயல்திறன் பற்றிய ஆரம்பக்கட்ட விவரங்களை திரு வோங்தான் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டார். மசெகவின் மத்திய செயற்குழுவில் உறுப்பினராக உள்ள திரு வோங், மசெக கொள்கை கருத்தரங்குக் குழுவின் ஆலோசகராகவும் உள்ளார்.