இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து தாள் வடிவில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டா. இவற்றுக்குப் பதிவுசெய்யும் முறைகளை எளிமைப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
தாள் சான்றிதழ்களுக்குப் பதிலாக மின்னிலக்கச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், இனி நேரடியாகச் சென்று பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்யமுடியாது.
இம்மாதம் 29ஆம் தேதி முதல் 'லைஃப்எஸ்ஜி' செயலி அல்லது இணையத்தளம் வாயிலாக பெற்றோர் தங்களின் குழந்தைகளின் பிறப்பைப் பதிவுசெய்யலாம். அதற்குப் பிறகு மின்னிலக்கப் பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யுமாறு பெற்றோருக்கு உடனடியாகத் தகவல் அனுப்பப்படும்.
தகவல் வந்த பிறகு 90 நாள்களுக்குள் பெற்றோர் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம். மின்னிலக்கச் சான்றிதழை கைபேசி போன்ற சாதனங்களில் வைத்துக்கொள்ளலாம்.
தற்போது பெற்றோர் குழந்தைகள் பிறந்த மருத்துவமனை அல்லது குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் பிறப்பு, இறப்பு பதிவகத்தில் பதிவுசெய்யவேண்டும்.
குழந்தைகளின் பிறப்பைப் பெற்றோர் இணையத்தில் பதிவுசெய்வதற்கான வசதி தற்போதும் உள்ளது. ஆனால் மருத்துவமனை அல்லது குடிநுழைவு, சோதனைச் சாவடி கட்டடத்தில் தாள் வடிவில் உள்ள சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஒருவரின் மரணத்தைப் பதிவுசெய்யும் முறையையும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் எளிமைப்படுத்தி வருகிறது. மாண்டவரின் உறவினர் எதிர்நோக்கக்கூடிய சுமையைக் குறைப்பது இலக்கு.
இதன்படி இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து யாரேனும் மரணமடைந்தால் மருத்துவர் ஒருவர் இணையம்வழி இறப்புச் சான்றிதழை வழங்குவார். இது, தானாகவே குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் பதிவகத்தில் சேர்க்கப்படும்.
இறப்புச் சான்றிதழின் எண்ணை அந்த மருத்துவரிடமிருந்து பெற்றுக்கொண்ட பிறகு மாண்டவரின் உறவினர் மின்னிலக்கச் சான்றிதழை 'மை லெகசி' எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒருவரின் இறப்பைப் பதிவுசெய்ய கட்டணம் கிடையாது.
மின்னிலக்கச் சான்றிதழ்களில் உள்ள 'கியூ ஆர்' குறியீட்டைக் கொண்டு அரசாங்க அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் கூறியது.

