சிங்கப்பூரின் மவுண்ட் ஃபேபர் கம்பிவட வண்டியில் 18 பேர் 30 நிமிடத்துக்கும் மேலாக சிக்கிக்கொண்டனர். செந்தோசாவுக்கும் மவுண்ட் ஃபேபருக்கும் இடைப்பட்ட பாதையில் கம்பிவட வண்டிகள் சிக்கிக்கொண்டன. தொழில்நுட்பக் கோளாறு இதற்கு காரணம் என கம்பிவட வண்டி சேவையை இயங்கும் நிறுவனம் குறிப்பிட்டது.
புதன்கிழமை (ஜூலை 27) அன்று இரவு சுமார் 9.15 மணியளவில் வண்டிகள் திடீரென்று இயங்குவதை நிறுத்தியதாகக் கூறப்பட்டது. சம்பவ இடத்துக்கு சிங்கப்பூர் காவல் துறையினரும், சிங்கப்பூர் குடிமை தற்காப்பு அதிகாரிகளும் விரைந்ததாக சின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது.
கோளாற்றை சரிசெய்வதற்கு முன், பயணிகளின் பாதுகாப்பை கருதி கம்பிவட வண்டிகள் அருகில் உள்ள நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றபட்டதாகக் கூறப்பட்டது. சோதனைகள் செய்யப்பட்டு, வழக்க சேவை மீண்டும் வியாழக்கிழமை தொடங்கியது.
2010ல் மின்னல் தாக்கி கம்பிவட வண்டிகளின் உணர்க் கருவிகள் பாதிக்கப்பட்டன. இதனால் வண்டிகள் திடீரென்று நிறுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தில் கிட்டத்தட்ட 20 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
1983ல் ஒரு எண்ணெய் தாங்கி கப்பலின் பளுதூக்கும் கருவி இரண்டு கம்பிவட வண்டிகளை மோதி, வண்டிகள் கடலில் விழுந்தன. இதில் எழு பேர் மாண்டனர்.

