ஆசியான் நாடுகள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் தணியவேண்டும் என்று விரும்புவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
பெரிய அளவில் ஆயுதங்கள் ஈடுபடுத்தப்படுவதால் தவறான மதிப்பீடு அல்லது விபத்து நேர்வதற்கான வாய்ப்பு இருப்பதை அவர் சுட்டினார்.
இருதரப்பும் பிரச்சினையை விரும்பாவிட்டாலும் தற்போதைய நிலவரம் ஆசியான் வட்டாரத்துக்கு அபாயகரமாக இருப்பதாக டாக்டர் விவியன் குறிப்பிட்டார். இரு வல்லரசுகளும் சுமூகப் போக்கைக் கடைப்பிடிப்பது ஆசியானுக்கு மிகவும் அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார்.
கம்போடியத் தலைநகர் புனோம்பென்னில் நடைபெறும் 55ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் நிறைவில் டாக்டர் விவியன் செய்தியாளர்களிடம் நேற்றுப் பேசினார்.
சந்திப்பில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களோடு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
சந்திப்பில் இரு நாடுகளுமே சர்ச்சையில் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதைத் தாம் கவனித்ததாகக் கூறிய டாக்டர் விவியன், ஆனால் இவற்றுக்கு இடையில் அரசியல் ரீதியான சச்சரவு ஏற்பட்டால் பொருள்களின் விலை உயரும், விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் என்றார்.
எனவே ஆசியான் நாடுகளின் சார்பாக அமெரிக்காவும் சீனாவும் இணக்கப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதாக டாக்டர் விவியன் கூறினார். இரு வல்லரசுகளும் ஆசியான் நாடுகள் தங்களில் ஒருவரை ஆதரிக்கும்படி வலியுறுத்தவில்லை என்பதையும் அவர் சுட்டினார். ஆசியான் சீனாவுடன் மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடனும் வர்த்தக உறவு பூண்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் புனோம்பென்னில் டாக்டர் விவியன் சந்தித்துப் பேசினார். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா, ஆசியானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு மடங்காகும் சாத்தியம் உள்ளதாக டாக்டர் விவியன் கூறினார். தென்கிழக்காசியா பெரும்பான்மை இளையர்களைக் கொண்டுள்ளதை அவர் சுட்டினார்.
மின்னிலக்க நிதித் துறையிலும் வர்த்தகத் துறையிலும் கணிசமான வளர்ச்சி கண்டு வரும் இந்தியா சிங்கப்பூருடன் ஒத்துழைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன; சிங்கப்பூரின் சிறுபான்மை தொழில் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்திய-ஆசியான் உறவிற்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சிங்கப்பூர், பொருளியல் ஒருங்கிணைப்பையும் வர்த்தக, சுங்க அனுமதி முறைகளையும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.