உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: சிறந்த கல்வியாளர்கள் சேர்ந்து நடத்துவதே சிறப்பு

பதினோராவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிங்கப்பூரில் நடைபெறும் என்று ஓர் அமைப்பும் சார்ஜாவில் நடைபெறும் என்று மற்றோர் அமைப்பும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

சிங்கப்பூரில், அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18ஆம் தேதி வரை தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறும் என்று முன்னாள் துணைவேந்தரான முனைவர் பொன்னவைக்கோ அறிவித்துள்ளார்.

சார்ஜாவிலுள்ள லிங்கன் தொழில், மேலாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஜூலை மாதம் 11வது தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறும் என்று மலேசியாவைச் சேர்ந்த முனைவர் த. மாரிமுத்து கூறியுள்ளார். 9, 10ஆம் மாநாடு களின் தலைவராகச் செயல்பட்டவர் இவர். அப்போது துணைத் தலைவராகச் செயல்பட்டவர் முனைவர் பொன்னவைக்கோ.

எனினும், சிங்கப்பூரில் அந்த மாநாட்டை நடத்துவது குறித்து சிங்கப்பூர் அரசாங்கமோ தமிழ் அமைப்புகளோ இதுவரையில் அதிகாரபூர்வ செய்திகள் வெளியிடவில்லை.
சிங்கப்பூரில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான திரு எஸ். மணியம், 62, உள்ளூர் அமைப்புகளின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் மாநாடு சிங்கப்பூரில் நடக்கும் என்றார். உலகத் தமிழ் இணைய மாநாடு, செம்மொழி மாநாடு ஏற்பாட்டுக்குழு போன்றவற்றில் பங்காற்றியிருக்கும் திரு மணியம், ‘மில்லேனியல் தமிழ்’ எனும் அமைப்பை கடந்த ஐந்தாண்டு களாக நடத்தி வருகிறார். உள்ளூரில் இளையர்கள் அளவில் தன்முனைப்புப் பேச்சுகளை இந்த அமைப்பு நடத்துகிறது.

அரசியல் அல்லது அரசு நிறுவனங்களின் ஆதரவில் நடைபெற்ற கடந்த சில மாநாடுகளைப் போலன்றி, இந்த மாநாட்டை ‘மில்லேனியல் தமிழ்’ அமைப்பும் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமுமே நடத்தும் என்று திரு பொன்னவைக்கோ கூறினார்.

இம்மாநாட்டின் ஆய்வுக்குழு ஆலோசகராகவும் ஏற்பாட்டுக்குழு உதவியாளராகவும் உள்ள முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, ஆய்வு நோக்கில் அமைந்த கட்டுரைகளே தேர்வுசெய்யப்படுகின்றன என்றும் இளையர்களுக்கான அங்கங்களும் இம்மாநாட்டில் இடம்பெறும் என்றும் சொன்னார்.

இந்நிலையில், இத்தகைய ஆய்வு மாநாட்டைத் தமிழ் அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒத்த நோக்குடன் ஒரே இடத்தில் நடத்துவதே சிறப்பு என்று சிங்கப்பூர் பெருமக்கள் கருதுகிறார்கள்.

தமிழாராய்ச்சி மாநாடு என்பது, தற்காலத் தேவைகளை உணர்ந்து எதிர்காலப் பொறுப்புடனும் இலக்கோடும் தேர்ந்த அறிஞர்களால் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என்று சிங்கப்பூரின் கல்வியாளர்களான வாழ்நாள் பேராசிரியர் அ. வீரமணியும், தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பனும் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தை முன்வைத்து, பல்கலைக்கழகத் துறையே முன்னெடுக்க வேண்டிய அறிவார்ந்த செயல்பாடு இது. தனி மனிதர்களும் தனி அமைப்புகளும் இத்தகைய மாநாடுகளை நடத்தும்போது விரும்பிய, தேவையான பலன்களைப் பெறமுடியாது. தேவையற்ற சிக்கல்களே ஏற்படும் என்பது முனைவர் வீரமணியின் கருத்து.

“சிங்கப்பூரில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறுவதாக இருந்தால், அதில் நாடாளுமன்ற இந்தியப் பேராளர்கள் பங்கெடுக்க வேண்டும் என்பதோடு, அந்த மாநாடு தமிழகத்திற்கு அப்பால் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் நிலைப்பாட்டையும் வலுயுறுத்துவதாக அமைய வேண்டும்.

“சிங்கப்பூரில் ஆட்சி மொழியாகத் தமிழை வலுவாக்கவும் பலரும் போற்றும் மொழியாக்கவும் தமிழர்களின் புழங்குமொழியாக்கவும் வழிவகுப்பதாக மாநாடு அமைய வேண்டும். அத்துடன், தமிழரின் மேம்பாடு குறித்தும் ஆராய வேண்டும். தமிழர் நலத்திலேயே தமிழ் மொழி வாழும் என்பதால் இரண்டையும் இணைத்து ஆராய வேண்டும். தலைசிறந்த அறிஞர்கள் 60 பேர் கூடினால் போதும். மிகத் தேவையான விஷயங்கள் குறித்து பேசுவதே முக்கியம்,” என்று முனைவர் அ. வீரமணி குறிப்பிட்டார்.

“தனிநாயக அடிகள் தொடங்கிய மாபெரும் அறிவுசார்ந்த மாநாடான இம்மாநாடு அவர் நினைத்ததற்கு மாறாக வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கிறது. நொபோரு கரஷிமா போன்ற தலைசிறந்த அறிஞர்கள் இந்த மாநாட்டை நெறிப்படுத்த முயற்சி செய்தும் இந்த நிலையில் இருப்பது வருத்தத்திற்கு உரியது. சிறந்த தமிழ் அறிஞர்களாலும் தரமான கல்வி நிறுவனத்தாலும் நடத்தப்பட்டால்தான் சமூகத்திற்கும் அறிவுலகத்திற்கும் நன்று,” என்று சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் அருண் மகிழ்நன் கருத்துரைத்தார்.

இத்தகைய மாநாடுகள் ஓரளவு நாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்படுத்துவதைத் தவிர கூடிக் கலையும் கூட்டமாகவே உள்ளன என்ற தமிழாசிரியர் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் தலை
வருமான திரு சி. சாமிக்கண்ணு, 74, இதுபோன்ற மாநாடுகளில் செலவிடும் பணத்தை உலக நாடுகளில் தமிழ்மொழிப் புழக்கமும் தமிழ்க் கல்வி வளரவும் பரவவும் ஆவன செய்தால் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

சிங்கப்பூரில் அரசாங்கம், தமிழ்ப் பட்டக்கல்வி பயிற்றுவிக்கும் இரண்டு பல்கலைக்கழகங்கள், கிட்டத்தட்ட 40 தமிழ் அமைப்புகள், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் துணையும் ஆதரவும் இல்லாமல் சிங்கப்பூரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை எவ்வாறு நடத்துவது? அதனை நடத்தி எதைச் சாதிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

சிங்கப்பூரில் நடைபெற உள்ள மாநாட்டில் எவ்விதத்திலும் பங்காற்றவில்லை என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) கூறியது. இது குறித்து தங்களிடம் எவ்விதமான ஆதரவும் கோரப்படவில்லை என்று வளர்தமிழ் இயக்கமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் தெரிவித்தன.

உலகத் தமிழ் ஆய்வு மன்றம் துவங்கப்பட்ட 1964ஆம் ஆண்டு முதல், இதுவரையில் 10 உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடந்துள்ளன. தொடக்க காலங்களில் பல்கலைக்கழகங்களும் தமிழை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் சரியான இலக்கு களைக் கொண்டவர்களும் இந்த ஆய்வு மாநாட்டை நடத்தினர்.

தமிழின் தொன்மை குறித்த ஆய்வுகள், தமிழுக்கும் பிறமொழிகளுக்குமான தொடர்பு, தமிழின் செவ்வியல் சிறப்பு போன்றவற்றை உலக அளவில் கல்விப் புலத்தில் எடுத்துரைக்கவும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், கணினித் தமிழ், தொழில்நுட்பத்தில் தமிழ் போன்ற தமிழ்மொழியின் தொடர் வளர்ச்சிக்கு வித்திடவும் ஆரம்ப கால மாநாடுகள் பங்களித்தன.

நாளடைவில் ஒரு திருவிழாவாக மாறி, அதன் உச்சமாக தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து போட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது தமிழ்மொழியின் சாபக்கேடு
என்றுதான் கூற வேண்டும் என்று சிங்கப்பூரின் கல்வியாளர்கள், தமிழ் செயல்பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்தனர்.

தமிழ்த் துறைசார் அறிஞர்களும் பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பேரறிஞர்களும் பங்கேற்கும்போது தமிழை உலகநிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று அவர்கள் கூறினர்.
முனைவர் த. மாரிமுத்து தலைமையிலான அமைப்பின் கௌரவப் பொதுச் செயலாளராக உள்ள முனைவர் திண்ணப்பன், சார்ஜா மாநாடு குறித்த விரிவான விவரங்கள் தெரியவில்லை என்றார்.
இம்மாநாட்டின் சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளராக கவிமாலை அமைப்பு செயல்படுவதாக அமைப்பின் மா. அன்பழகன் கூறினார். சார்ஜா மாநாட்டுக்காகப் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை இவர் திரட்டுகிறார்.

இம்மாநாட்டில் அனைத்துலக விருதுகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி, தமிழ்மொழி மேம்பாடு குறித்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் பல
தரப்பினரும் ஒன்றுசேர்ந்து செயல்படுவதுடன், நோக்கமும் இலக்குகளும் தெளிவாக இருக்கும் பட்சத்தில் பங்களிப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்று தமிழர் பேரவை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், தமிழாசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்தன.

“சிங்கப்பூரில் பல தமிழ் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடக்கின்றன. தமிழ் இளையர் மன்றம், தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை, தமிழ் எழுத்தாளர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தமிழ், இலக்கிய மாநாடுகளை நடத்துகின்றன. இதில் இன்னோரு மாநாடும் சேர்ந்தால் பங்களிக்கவோ கலந்துகொள்ளவோ எங்கே நேரம் இருக்கிறது,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத தமிழாசிரியர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், 13வது உலகத் தமிழாசிரியர் மாநாடு சென்னையில் இவ்வாண்டு டிசம்பர் 2, 3, 4ஆம் தேதிகளில் நடக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதம் உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டை கலிஃபோர்னியா தமிழ்க் கல்வி கழகம் நடத்துகிறது.

சிங்கப்பூரின் தமிழ்க் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் தற்போது தமிழாசிரியர் மாநாட்டிலேயே கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!