இளையர் வளர்ச்சிக்கான மதியுரைத் திட்டங்கள்

பலம் பலவீனம் என்பது அனைவரிடமும் இருக்கும். பலத்தை வளர்ப்பதோடு நின்று விடாமல் தன் பலத்தை பயன்படுத்தி பலவீனத்தை குறைப்பதற்கும் தன்னுடைய மதியுரைஞர் முஹம்மது அல் அமீன் வழிகாட்டியதாக பகிர்ந்து கொண்டுள்ளார் பர்லீன் பெனிட்டா லவ், 23.

இந்த அணுகுமுறை அவர் பலவீனங்களை பார்க்கும் கோணத்தை மாற்றி, அவரது தாழ்வு மனப்பான்மையை நீக்க வழியமைத்திருக்கிறது.

சிண்டாவின் மதியுரை திட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் தன்னம்பிக்கை வளர்ந்ததாக கூறிய பர்லீன், இந்த தன்னம்பிக்கை தனக்கும் சக மாணவர்களுக்கும் சிக்கல்களை எதிர்கொள்ளவும் நெருக்கடியான சூழல்களிலிருந்து மீளவும் உதவுவதாக கூறினார். 

இந்த வழிகாட்டி திட்டம் பர்லீன் தன்னைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு தளமாக அமைந்திருக்கிறது. கடினமாக உழைக்க கூடிய ஆற்றலும் (conscientious learner) சிறந்த முறையில் செயல்பட கூடிய ஆற்றலும் (best version of herself) தனக்கு இருப்பதை பர்லீனுக்கு மதியுரைத்தல் சுட்டிக்காட்டியுள்ளது. 

பாடத்தை தாண்டி, சொந்த வாழ்க்கையிலும் தேவைப்படக்கூடிய முக்கிய கூறுகளைக் கற்றுக்கொண்டதாக இவர் சொன்னார். “முன்பு இருந்ததை விட, ஒரு சிறந்த மகளாக, சகோதரியாக, தோழியாக, ஊழியராக இந்த திட்டம் என்னை மாற்றியுள்ளது,” என்றார் பர்லீன். 

சமமான சீரான வாழ்க்கை முறை 

சமூக சேவகராக (Social Worker) பணி புரியும் இவரது குறிக்கோள்களில் ஒன்று, சமமான சீரான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதாகும். தனது பணியை புரிய உணர்ச்சிகளையும் மனதளவிலான சிந்தனைகளையும் பயன்படுத்தும் இவருக்கு மன சோர்வு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. இதை சரிக்கட்ட உடற்பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று  இவர் தீர்மானித்திருக்கிறார். இதை அறிந்த அவரது மதியுரைஞர் உடற்பயிற்சி வழிவகைகளை (routines) அவருக்கு அனுப்பி வைப்பார் என்றார் பர்லீன். நீண்ட நாள் நன்மை பயக்கக்கூடிய (sustainable) மதியுரை வழங்குவதோடு நின்று விடாமல் அவ்வப்போது பர்லீனை தொடர்பு கொண்டு அவருக்கு வேண்டிய உதவிகளையும் அவர் செய்வது தன் குறிக்கோளை அடைய உதவுவதாக பர்லீன் கூறுகிறார். 

வேலை பார்ப்பதற்கு முன், நேர்காணல் திறன்களை பர்லீன் வளர்த்துக் கொள்ளவும் அவரது மதியுரைஞர் பயிற்சி அளித்திருக்கிறார். வேலை தேடலில் இந்த திறன்கள் அவருக்கு பெரும் உதவியாக இருந்திருக்கிறது. தன் பலங்களை மனதில் கொண்டு வேலை வாய்ப்புகளை தேர்வு செய்யவும் அவர் கற்றுக் கொண்டுள்ளார். 

இந்த திட்டத்தில் அவர் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்களில் ஒன்று, தான் சார்ந்திருக்கும் வாழ்க்கை கூறுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதை உணர்த்ததாகும். தான் முக்கியமாக கருதும் மதிப்புகளில் ஆக முக்கியமானது எது என்று அவரது மதியுரைஞர் கேட்டபோது அனைத்துமே பர்லீனுக்கு முக்கியமாக தெரிந்திருக்கிறது. இந்த கேள்வியியை கேட்டதன் காரணம் ஆகா முக்கியமான மதிப்பை மற்ற முக்கியமான மதிப்புகளுடன் பர்லீன் எவ்வாறு இணைக்கிறார் என்பதை புரிந்துகொள்ளதான். 

இந்த மதியுரை பயணம் பர்லீன் சுயமாக தன்னை மேம்படுத்திக் கொள்ளும் பாதையில் அவரை வழிநடத்த தொடங்கியிருக்கிறது. தன் கடமைகளை பூர்த்தி செய்வதோடு தன்னை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளவும் இது வழியமைத்து கொடுத்திருக்கிறது. 

மதியுரை திட்டங்களின் தனித்தன்மை

“மாணவர்கள் மதியுரைஞர்களோடு கொண்டுள்ள உறவு ஒவ்வொன்றும் வேறுபட்டிருக்கும், வெவ்வேறு குறிக்கோள்களை கொண்டிருக்கும். இதுவே மதியுரை திட்டத்தின் தனித்தன்மையாகும்,” என்கிறார் பர்லீன். 

தொழில் முறையையும் வாழ்க்கை முறையையும் (Professional and personal) மேம்படுத்த ஒரு திட்டமைப்பை (structure) அவரது மதியுரைஞரும் இவரும் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்த பயணத்தில், பர்லீனின் மதியுரைஞர் அவருக்கு ஆலோசனைகளையும் தேவையான ஆதரவை வழங்கியதோடு ஒரு முன் மாதிரியாகவும் திகழ்ந்திருக்கிறார். தன் மதியுரைஞரோடு அவர் கொண்ட இந்த உறவு தனக்கு நீண்டகாலம் பயனளிக்கும் நல்ல கூறுகளை அவரது வாழ்க்கையில் வேரூன்றி இருக்கிறது. 

“மதியுரைத்தல் மாணவர்கள் கடினமாக கருதும் வாழ்க்கை சவால்களை எதிகொள்ளும் போதும், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்திற்கு அவர்கள் செல்லும் போதும், வேலை செய்ய தொடங்கும் போதும், ஆதரவு அளிக்கக்கூடிய ஒன்றாகும். ஒருவரின் சமூக வலையை விரிவடைவதற்கும் (Broadening social network), புதிய அனுபவங்களை பெற்று தருவதற்கும், தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வதற்கும், புதிய வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்துவதற்கும் பாலமாக அமையும்,” என்கிறார் பர்லீன்.

சிண்டாவின் ‘மென்டர் மீ’ மதியுரைத் திட்டம்

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) ‘மென்டர் மீ’ என்ற மாணவர்களுக்கு மதியுரைத்தல் திட்டம் இளையர்களின் வளர்ச்சியை முழுமைப்படுத்தும் சிண்டாவின் குறிக்கோள்களில் முக்கிய பங்கு வகுக்கிறது. மாணவர்கள் தங்களை, தங்கள் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ளவும், தங்களின் இலக்குகளை அடைய தேவைப்படும் ஆதரவையும் இத்திட்டம் வழங்குகிறது.  

உயர்நிலை பள்ளி, பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு (Tertiary Students) தங்கள் சொந்த வாழ்க்கையிலும், பாடங்களிலும், வாழ்க்கை தொழிலிலும் சிறந்து விளங்க பல துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் மதியுரைஞர்களாக இத்திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறார்கள். 
கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்மூலம் இதுவரை 447 இளையர்கள் பலனடைந்துள்ளனர்.  

அது மட்டுமல்ல, மாணவர்கள் தாங்கள் விரும்பும் வாழ்க்கை தொழில்களின் முக்கிய அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ள பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த அறிதல் அவர்களுக்கு படிப்பிலும் தொழிலிலும் தகுந்த முடிவுகளை எடுக்க வழி காட்டுகிறது. 

திட்டத்தின் மூன்று தளங்கள் 

வாழ்க்கை தொழில் மதியுரைத்தல்,  இளையர்களுக்கான மதியுரைத்தல், திறன் மேம்பாட்டு திட்டம், ஆகிய மூன்று தளங்கள் மூலம் சிண்டா மாணவர்களுக்கு உதவ முனைந்துள்ளது. 
வாழ்க்கை தொழில் திட்டம் பட்டம் பெற்ற மாணவர்களுக்கானது. தாங்கள் பட்டம் பெற்றுள்ள துறையில் பணிபுரியும் வல்லுநர்கள் தங்களின் நிபுணத்துவத்தையும் (expertise) அனுபவத்தையும் கொண்டு மாணவர்களுக்கு மதியுரை வழங்குவார்கள். இதன் மூலம் மாணவர்கள் வாழ்க்கை தொழில் குறித்து திட்டவட்டமாக முடிவுகள் எடுக்க முடியும். 

இளையர்களுக்கான திட்டத்தில், மற்ற சக மாணவர்கள் மதியுரை வழங்குவார்கள். இது மாணவர்கள் மதியுரைத்தல் பற்றி புரிந்து கொள்ளவும் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் முதல் படியாக அமையும்.  

இறுதியாக, திறன் மேம்பாட்டு திட்டத்தில் மாணவர்கள் சொந்த வாழ்க்கைக்கும் தொழில்முறை வாழ்க்கைக்கும் தேவைப்படும் திறன்களையும் வளர்த்து கொள்ள பட்டறைகளில் கலந்து கொள்வார்கள். 

மாணவர்கள் ஒரு ஊழியராக மாறும் போது தேவைப்படும் சிந்தனை ஆற்றலையும் இதன் மூலம் மேம்படுத்திக் கொள்ள முடியும். 

மாணவர் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் 

சிண்டாவின் ‘மென்டர் மீ’ திட்டம் பள்ளி பாடங்களை தாண்டி தேவைப்படும் அறிவாற்றலையும், சிந்தனையாற்றலையும் வளர்த்துக்கொள்ள உதவி வருகிறது. வாழ்க்கை தொழில் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு வழிகாட்டுவதுடன், சொந்த வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ளவும் உகந்த ஆலோசனைகளையும் மதியுரைஞர்கள் அளித்து வருகிறார்கள். தன்னம்பிக்கையை இதன் மூலம் வளர்த்துக்கொள்ளும் மாணவர்கள் தொடர்ந்து வருங்காலத்திலும் வெற்றிகரமாக செயல்பட இத்திட்டம் ஊக்கம் அளிக்கிறது. 
அதோடு, மாணவர்களின் மனநலனை பாதுகாக்க மறவாமல் மதியுரைஞர்கள் அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.  

வருங்கால திட்டங்கள்

சிண்டாவின் திட்டங்களை மேலும் வலுப்படுத்த, 2023இல் இரண்டு புதிய மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட போகின்றன. 

முதலாவதாக, திட்டமிடப்பட்ட பட்டறைகள் மூலம் வாழ்க்கை தொழிலுக்கான மதியுரைத்தல் பெறுவதன் நன்மைகளையும் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் திட்டம் ஒன்று அமல்படுத்தப்படும் (Structured Career Guidance Workshops). வாழ்க்கை தொழிலைத் தேர்ந்தெடுத்த பிறகு ஒருவர் சந்திக்கக் கூடிய சவால்கள் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மனநிறைவு அளிக்கும் பாதையை அமைத்துக் கொள்வது எப்படி என்பதையும் இப்பட்டறைகள் விளக்கும். இதன் மூலம், மாணவர்கள் தங்களின் மன நலனை பாதுகாத்து மகிழ்ச்சியுடன் பணி புரியக் கூடும். 

இரண்டாவதாக, இவ்வாண்டு உயர்நிலை பள்ளி, பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு (Tertiary Students) தொடங்கப்பட்ட பெருநிறுவன மதியுரை திட்டம் (Tertiary Corporate Mentoring Initiative) மேம்படுத்தப்படும். இதுவரை திட்டத்தில் சேர்க்கப்படாத துறைகளும் 2023இலிருந்து சேர்க்கப்படும். 

சிங்கப்பூரின் நிறுவனங்களுக்கு கற்றல் பயணங்கள் மேற்கொண்டு பெருநிறுவன முறைகளை மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் இந்த திட்டத்தில், மாணவர்கள் தொடர்ந்து வல்லுநர்களிடம் உரையாடி வெவ்வேறு துறைகளை பற்றிய தங்களின் புரிதலை வளர்த்து கொள்வர். இதன் மூலம் வருங்காலத்தில் தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தேவைப்படும் திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

மதியுரை  நிபுணரின் கருத்துகள்

மதியுரைஞராக இயங்கி வரும் டாக்டர் ப்ரீத்தி கச்ரூ பகத், 47, (படம்) சுய மேம்பாட்டில் மதியுரைத்தல் பெரிதும் உதவுவதாக கருதுகிறார். ஹெலியன் (Haleon) எனும் உலகின் முன்னணி சுகாதாரத் துறை நிறுவனத்தில் முதன்மை அறிவியலாளராக பணிபுரியும் இவர் தன் முன்னாள் நிறுவனத்தின் சக ஊழியர்களிடம் மதியுரைத்தலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பை பற்றி அறிந்து கொண்டார்.

நிறுவனத்திலும், வெளியிலும் மதியுரைஞராக இயங்கி வருகிறார் இவர். தனது கற்றல் பயணத்தில், பல வித்தியாசமான மதியுரைத்தலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். பின்னோக்கு மதியுரைத்தல் (Reverse Mentoring), அதாவது ‘ரிவர்ஸ் மென்டோரிங்’ மூலம் தலைமை பொறுப்பு வகுக்கும் இவரும் மதியுரை பெற்றிருக்கிறார். சிறந்த தலைவராக இவர் திகழ இந்த முயற்சி உதவுவதாக பகிர்ந்துக் கொண்டுள்ளார். 

“மதியுரை வழங்குவது இருமுக தன்மை கொண்டது. சுயமாக நம்மை மேம்படுத்தி கொள்ள உதவுவதோடு, நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, புதிதாக சேரும் ஊழியர்களுக்கு மதியுரை வழங்கவும் மதியுரைத்தல் உதவுகிறது,” என்றார் டாக்டர் ப்ரீத்தி. இதுவே மதியுரைத்தல் பற்றி இவருக்கு மிகவும் பிடித்தமானதாகும். 

மதியுரைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் தொழில் பயணம், தங்களின் வெற்றி தோல்விகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வது ஆலோசனை பெறுபவர்களுக்கு நல்ல பாடமாக அமைகிறது. அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், அவர்களின் வாழ்க்கை தொழில் பயணத்தை சீராக தொடரவும் இது வழிவகுக்கிறது என்கிறார் இவர். ஒருவர் தன் பயணத்தில் தனிமையை உணராமல் இருப்பதையும் மதியுரைத்தல் உறுதிப்படுத்துகிறது. 

மதியுரைஞராக இயங்கியதில் வலுவான உறவை அமைத்துக்கொள்ளும் வாய்ப்புகளை பெற்றதாகவும், தனது கேட்டல் திறனை வளர்த்து கொண்டதாகவும் டாக்டர் ப்ரீத்தி சொன்னார். அறிவுரைகளை மட்டும் அளிக்காமல், ஒருவர் சந்திக்கும் சிக்கலை பற்றி நன்கு அறிந்துக்கொண்டு வழிகாட்டுவதே சிறந்த முறை என்கிறார் இவர். 

“எனது தலைமைத்துவ வழிமுறைகளை மற்றவர்களிடம் அச்சிடுவதை தவிர்த்து ஒருவரின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவி, அவர்களை அவர்களின் வழியில் தலைமைத்துவத்துக்கு தயார் செய்வது நன்று,” என்று கருதுகிறார் டாக்டர் ப்ரீத்தி. தான் மதியுரை வழங்கிய வெய்லிங் (Weiling) என்பவருக்கு துணிவையும் தன்னம்பிக்கையையும் வளர்த்து கொள்ள உதவியதில் இவர் மனநிறைவு பெற்றத்தையும் பகிர்ந்து கொண்டார். 

அறிவுரை பெறுபவர்களுடன் மதியுரைஞர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் அவர்கள் மேலும் வளர்ச்சி அடைவார்கள். தாங்கள் கற்றுக்கொண்டதை செயல்படுத்தவும் அவர்களுக்கு இது உதவும் என்கிறார் டாக்டர் ப்ரீத்தி.

மென்டரிங் எஸ்ஜி

தேசிய அளவிலான ‘மென்டரிங் எஸ்ஜி’ சிங்கப்பூரில் மதியுரை கலாச்சாரத்தை வளர்க்கவும் இளையர்கள் மதியுரை பெறுவதை சுலபமாக்கவும் தொடங்கப்பட்டது. ‘ஃபார்வர்ட் எஸ்ஜி’ திட்டத்தின் ஓர் அங்கமான இந்த ‘மென்டரிங் எஸ்ஜி’ திட்டம் இளையர் மேம்பாட்டை அதிகரிக்கவும், பள்ளியிலிருந்து வேலை பார்க்கும் போது ஏற்படும் நிலைமாற்றத்தின் போது ஆதரவு அளிக்கும் நோக்கங்களுடன் இயங்கி வருகிறது.  

இளையர்கள் நிலைமாற்றங்களை சந்திக்கும் பொது, வெற்றி குறித்த புரிதலை பரந்த கோணத்தில் பார்க்கவும், நடைமுறை வாழ்க்கையில் தேவைப்படும் அறிவுரைகள், ஆதரவு, வழிகாட்டுதல் போன்றவற்றை பெறவும் மதியுரை கலாசாரம் உதவும். 

மதியுரைத்தல் முயற்சிகளை வலுப்படுத்துவதும், இந்த முயற்சி அணைத்து இளையர்களையும் சென்றடைவதையும் குறிக்கோள்களாக கடந்த ஆண்டு, மார்ச் மாதம் தொடங்கப்பட்ட மதியுரைச் செயற்கூட்டணி (Mentoring Alliance for Action (AfA)) கொண்டுள்ளது.  ‘எஸ்ஜி டுகெதர்’ செயற்கூட்டனிகளில் இது ஒன்றாகும். சிங்கப்பூர் மதியுரை கூட்டணி மற்றும் தேசிய இளையர் மன்றம் இந்த செயற்கூட்டணிக்கு தலைமை வகுக்கும். 

மதியுரைச் செயற்கூட்டணி மற்றும் பெருநிறுவனங்கள், மதியுரை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், இளையர் குழுக்கள், தொழில்முறை அமைப்புகள் (Professional Organisations) போன்றவற்றுடன் இணைந்து, தன்னம்பிக்கை, மீள்திறன் கொண்ட இளையர்களை மேலும் வளர்க்க முனைகிறது.

The People, Public and Private (3P) என்ற மூன்று தரப்புகளிலிருந்து வந்த 16 பேரைக் கொண்ட மதியுரைச் செயற்கூட்டணியின் தலைமை குழு,  இதுவரை 400 அடித்தள பயிற்சியாளர்கள் (ground practitioners), இளையர்கள், மதியுரைஞர்கள், பெற்றோர்கள் ஆகியவர்களை நாடி, தற்போது இருக்கும் மதியுரை கலாசாரத்தை பற்றிக் கருத்துகளை திரட்டியுள்ளது. தற்போது இருக்கும் தரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம், அதன் நிறை குறைகள் என்னவென்றும் இந்த செயற்கூட்டணி கண்டறியும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. 

“மதியுரை கலாசாரத்தை வளர்ப்பதும், மதியுரைத்தலை பொதுவான வளமாக இளையர்களுக்கு வழங்குவதும் மதியுரைச் செயற்கூட்டணியின் உந்து சக்தியாகும் (driving force). வலுவான மதியுரைத்தல் திட்டமைப்பு இளையர்கள் தங்கள் வளர்ச்சி பயணத்தில் மதியுரைத்தலை இயல்பாகவே நாடும் வகை மாற்றும். பங்காளி அமைப்புகளின் ஆதரவோடு, மதியுரைக் கலாசாரத்தை சமூகத்தில் வளர்த்து, இளையர்கள் பயனடைய வழிவகுக்கலாம். எங்களுடன் இணைந்து, சமுதாயத்திற்கு திரும்பி கொடுக்க (giving back to society) மேலும் பல அமைப்புகளை பங்காளிகளாக நான் ஊக்குவிக்கிறேன்,” என்று கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக தொழில் துறை துணை அமைச்சரான திரு ஆல்வின் டான் கூறியுள்ளார். 

இளை­யர்­கள் தங்­க­ளது முழு ஆற்­றலை வெளிப்­ப­டுத்தவும் சாதிக்­கவும், தங்களின் தனி நபர் வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ளவும், தங்கள் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுத்து கொள்ளவும் பல வாய்ப்புகளை ‘மென்டரிங் எஸ்ஜி’ ஏற்படுத்திக்கொடுக்க செயல்படுகிறது. 

இளை­யர்­கள் தங்­க­ளது முழு ஆற்­றலை வெளிப்­ப­டுத்தவும் சாதிக்­கவும், தங்களின் தனி நபர் வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ளவும், தங்கள் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுத்து கொள்ளவும் பல வாய்ப்புகளை ‘மென்டரிங் எஸ்ஜி’ ஏற்படுத்திக்கொடுக்க செயல்படுகிறது. 
மென்டரிங் எஸ்ஜி இயக்கத்தில் மதியுரை வழங்குபவராகவோ பெறுபவராகவோ இன்றே இணையுங்கள். 

இப்போதே mentoring.sg இணையப்பக்கத்திற்குச் சென்று மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!